×

150 விசைப்படகுகள் சுழற்சி முறையில் மீன்பிடிக்க சென்றன

தூத்துக்குடி: தூத்துக்குடி, வேம்பார் பகுதியில் இன்று முதற்கட்டமாக சுமார் 150  விசைப்படகுகள் சுழற்சி முறையில் மீன்பிடிக்க சென்றன. இந்த படகுகள் அனைத்தும் இரவே கரை திரும்புகின்றன. தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15ம் தேதி வரை மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக விசைப்படகு மீனவர்கள் மார்ச் 25 முதல் கடலுக்கு செல்ல முடியாததால் தடைக்காலத்தை முன்னரே முடித்துக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 15 நாட்கள் முன்பாக இன்று(1ம் தேதி) அதிகாலை முதல் விசைப்படகுகள் மீன்பிடிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, வேம்பார், தருவைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400 விசைப்படகுகள் உள்ளன.  அரசு முன்கூட்டியே மீன்பிடிக்க அனுமதித்துள்ளதால் பராமரிப்பு முடிந்த படகுகளை வெள்ளோட்டம் விட்டு கடலுக்கு செல்வதற்கு மீனவர்கள் தயாராக உள்ளனர்.

இந்நிலையில் சப்.கலெக்டர் சிம்ரான் ஜித்சிங் கலோன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்ட 241 விசைப்படகுகளில் சுழற்சிமுறையில் தினமும் 120 படகுகள் மீன்பிடிக்க செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் மீனவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், மீன்பிடி துறைமுகத்துக்கு வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்வதற்கு வசதியாக நுழைவுவாசலில் தெர்மல் ஸ்கேனர் கருவி பொருத்தப்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று (1ம்தேதி) அதிகாலையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 120 விசைப்படகுகள் முதற்கட்டமாக மீன் பிடிக்க சென்றன. இவை மீன்பிடித்து இன்று இரவே துறைமுகம் திரும்புகின்றன. நாளை சுழற்சி முறையில் மேலும் 120 படகுகள் மீன்பிடிக்க செல்கின்றன.

இதுபோல் வேம்பார் பகுதியில் இருந்து 30 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்வதாக சங்க தலைவர் பால்பாண்டி தெரிவித்துள்ளார். தருவைகுளம் பகுதி மீனவர்கள் பெரும்பாலும் அரபிகடல் பகுதியில் மீன்பிடிக்க செல்வது வழக்கம். தற்போது புயல் சின்னம் காரணமாக அரபிக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும், இதனால் தருவைகுளத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க  செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.

Tags : About 150 ,vessels , fishing , circulation
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...