×

50 சதவீத வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு படையெடுப்பு ஆட்கள் பற்றாக்குறையால் திணறும் ரிக் லாரி தொழில்: ஆர்டர்கள் கைநழுவி போவதால் வேதனை

சேலம்:  ஊரடங்கு அமலால் 50 சதவீத வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதனால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு திணறி வருவதாக ரிக் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த மார்ச் 24ம் முதல் மத்திய அரசு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனால் வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், மால்கள் உள்பட பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பல லட்சம் தொழிலாளர்கள் வேலையை இழந்து, வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். பலர் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர். இந்தியா முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகின்றன. இதில் 40 ஆயிரம் ரிக் வண்டிகள் ஓடுகின்றன. ஊரடங்கு அமலால் கடந்த மார்ச் 24ம் தேதி, ரிக் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் 4ம் கட்ட ஊரடங்கில், மத்திய அரசு பல தொழில்களுக்கு அனுமதியளித்துள்ளது. அதில் ரிக் லாரி தொழிலும் ஒன்றாகும். ஊரடங்கு காரணமாக ரிக் லாரி தொழிலில் போதிய வேலை இல்லாததால், வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதனால் ஊரடங்கு தளர்த்திய பின்பும், ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் ரிக் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த ரிக் வண்டி உரிமையாளர் சிவனேசன் கூறியதாவது: இந்தியாவிலேயே சேலம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் தான் ரிக் லாரிகள் அதிகளவில் உள்ளன. இங்கிருந்து தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், வடமாநிலங்களுக்கும் ரிக் லாரிகள் செல்கின்றன. ரிக் வண்டியில் பத்துக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. சிறிய ரிக் லாரி என்றால் 5 முதல் 6 பேர் இருப்பார்கள். பெரிய லாரி என்றால் 7 முதல் 8 பேர் இருப்பார்கள். ஒவ்வொரு ரிக் வண்டிக்கு கட்டணம் மாறுபடும். ரிக் லாரி தொழிலில், கோடை காலத்தில் தான் வேலை அதிகம் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் ரிக் லாரிகளுக்கு இடைவிடாமல் வேலை இருந்து கொண்டே இருக்கும். நடப்பாண்டு கோடை தொடங்குவதற்கு முன்பே கொரோனா வைரஸ் பரவியது. இதனால் இந்தியா முழுவதும் எங்கும் ரிக் லாரிகள் இயங்கவில்லை.  ரிக் லாரி தொழிலில் 70 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஒடிசா, பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். மீதமுள்ள 30 சதவீதம் பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள். கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக ரிக் லாரி தொழில் இயங்காததால், இத்தொழிலில் ஈடுபட்டு வந்த வட மாநில தொழிலாளர்கள் 50 சதவீதம் பேர், அவர்களது சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.

தற்போது கோடை வெயில் காரணமாக போர்வெல்கள் போட, ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் போதியளவு தொழிலாளர்கள் இல்லாததால், ஆர்டர்கள் கிடைத்தும் பயனின்றி போகிறது.  வந்த ஆர்டரை சரிவர முடிக்க முடியாமல், ரிக் லாரி உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால் ரிக் லாரி உரிமையாளர்களுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததால் தான், வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு வருவார்கள். அதுவரை ரிக் லாரி தொழிலில் பாதிப்பு இருக்கத்தான் செய்யும்.
இவ்வாறு சிவனேசன் கூறினார்.

வட மாநில தொழிலாளர் வேண்டாம் என்று ‘கறார்’  
‘‘ரிக் லாரி தொழிலில் மோட்டார் மெக்கானிக்குகள், கம்ப்ரசர் மெக்கானிக்குகள், போர்வெல் போடும் ெதாழிலாளர்கள், மேலாளர் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இதில் போர்வெல் போடும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள். கொரோனா வைரஸ் பரவலால், போர்வெல் போட ஆர்டர் தருபவர்கள் வடமாநில தொழிலாளர்கள் வேண்டாம் என்று கூறுகின்றனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால், வீட்டில் இருப்பவர்களுக்கு பரவும் என்ற அச்சத்தில் போர்வெல் ஆர்டர் தருபவர்கள் வட மாநில தொழிலாளர்களை அழைத்து வரவேண்டாம் என்று கறாராக கூறுகின்றனர். ஒரு பக்கம் ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், மற்றொரு பக்கம் வட மாநில தொழிலாளர்கள் வேண்டாம் என்று கூறுவதால் பல ஆர்டர்கள்  கைநழுவி போகிறது,’’ என்பதும் ரிக் லாரி உரிமையாளர்களின் குமுறலாக உள்ளது.

Tags : state workers ,Northern ,shortage ,invasion personnel ,homeowners , 50% , Northern state workers ,hit, truck shortage: agonizing ,over orders
× RELATED கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது