×

நொறுங்கிய பொம்மை தொழில்: 600 தொழிலாளர் குடும்பங்கள் பரிதவிப்பு

கடலூர்: கொரோனா தடையால் கடலூரில் பிரசித்தி பெற்ற பொம்மை தொழில் கடுமையாக  நசிவடைந்துள்ளது. இத்தொழிலை நம்பியுள்ள 600 களிமண் மற்றும் காகித கூழ் பொம்மை தொழிலாளர்கள் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் விவசாயம் மீன்பிடி பிரதான தொழில்களாக இருந்தாலும், குடிசை தொழிலாக நடந்து வரும் பொம்மை தொழில் பிரசித்தி பெற்றதாகும். இங்கு செய்யப்படும் கலைநயமிக்க பொம்மைகளுக்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. கடலூர் பழைய வண்டிப்பாளையத்தில் மூன்று தலைமுறைகளாக 150 குடும்பத்தினர் களிமண் மற்றும் காகித கூழ் பொம்மைகள் உற்பத்தி செய்து வருகின்றனர். இங்கு செய்யப்படும் நவராத்திரி கொலுபொம்மைகள், விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, நடனமாந்தர் பொம்மைகள், கிறிஸ்துமஸ் பொம்மைகள்  புகழ் பெற்றவையாகும். இது போல் ராமாயணம், மகாபாரதம் கதைகளை கூறும் பொம்மைகள், கிருஷ்ணலீலை பொம்மைகள் வேறு எங்கும் கிடைக்காததாகும். இங்கு பொம்மைகள் வாங்குவதற்காக கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும், தமிழகம் முழுவதிலுமிருந்தும் பொது மக்கள், பொம்மை விற்பனை நிறுவனத்தினர் நேரில் வந்து வாங்கி செல்கின்றனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பொம்மைகள் சென்னை, கோயம்பத்தூர், மதுரை, திருச்சி, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி,  தசரா விழாக்களில் விற்பனை செய்யப்படுகின்றன.  மற்றும் சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொம்மைகள் தனி சிறப்பு மிக்கவை. இதற்கு காரணம் தரமான மண் மற்றும் கைவண்ணமும் கலை வண்ணமும் மிக்க பொம்மை தொழிலாளர்களின் நேர்த்தியான படைப்பு திறன்.
பள்ளி கல்லூரி  மாணவர்களுக்கும், சுய உதவிக்குழு மகளிருக்கும் இங்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இது போல் சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நடைபெறும் கலாசார விழாவில் வண்டிப்பளையம் பொம்மை தொழிலாளர்கள் நேரில் பங்கேற்று அவர்கள் நடத்திய  பொம்மை கண்காட்சி மற்றும் அவர்களின் நேர்த்தி மிக்க பொம்மை படைப்பு திறன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. இது போலவே கடலூர் மாவட்டத்தில் பொம்மை தொழில் மணவெளி, வசந்தராயன்பாளையம், கே.என்.பேட்டை, சாவடி, பண்ருட்டி வையாபுரிபட்டினம், வடலூர், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில்  600க்கும் மேற்பட்ட பொம்மை உற்பத்தி தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன.

இந்நிலையில், கொரோனா தடை உத்தரவால் பொம்மை தொழில் அடியோடு முடங்கியது. ஈஸ்டர் பண்டிகைக்காக உற்பத்தி செய்து வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான பொம்மைகள் விற்பனையாகாமல் தேங்கின. திருமண மண்டபங்கள் மூடப்பட்டதால் கல்யாண சுப நிகழ்ச்சிகளுக்கான நாகவள்ளி முகூர்த்த பானைகளும் வாங்க ஆளில்லாமல் போனது. மண்பாண்டங்களையும் விற்பனை செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.அடுத்து வரும் விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்திரி விழாக்களுக்கு தற்போதைய கோடை வெயில்தான் மூலதனம். இந்த வெயிலை பயன்படுத்தி எவ்வளவு வேகமாக பொம்மைகள் செய்ய முடியுமோ, செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் தற்போதையை கொரோனா தொடர் தடையால் வெயில் காலத்தை பயன்படுத்திகொள்ள முடியாமல் போனது.. குடிசை தொழிலாக உள்ள பொம்மை  உற்பத்தி தொழிலை கொரோனா வெகுவாக பாதித்துள்ளதால் கடலூர் மாவட்டத்தில் சுமார் 600 பொம்மை உற்பத்தி தொழிலாளர்கள் வேலையின்றி வறுமையால் வாடிக்கொண்டுள்ளனர். இந்த பாதிப்பு  இன்னும் இரு ஆண்டுகளுக்கு பொம்மை உற்பத்தி தொழிலாளர்களின் வாழ்க்கையில் நீடிக்கும் என்ற அச்சம் அவர்கள் மத்தியில் உள்ளது. எனவே தமிழக அரசு தனி கவனம் செலுத்தி பொம்மை உற்பத்தி தொழில் புத்துயிர் பெறவும், தேங்கி கிடக்கும் பொம்மைகளை விற்பனை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘லட்சக்கணக்கான பொம்மைகள் தேங்கியுள்ளன’
இது தொடர்பாக கடலூர் பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்த  பொம்மை  உற்பத்தியாளர் கார்த்திகேயன்(47) கூறுகையில், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, தசரா, கிறிஸ்துமஸ் ஆகிய  விழாக்கள்தான் பொம்மை உற்பத்தி தொழிலாளர்களின் முக்கிய வாழ்வாதாரமாகும். தற்போதைய கொரோனா தடையால் கோடை வெயில் காலத்தை பயன்படுத்த முடியாமல் போய்விட்டது.  தற்போதைய தடையால் பல லட்சக்கணக்கான பொம்மைகள் தேங்கியுள்ளன. அவற்றை அகில இந்திய  கைவினை தொழில் வாரியம், பூம்புகார் விற்பனை நிலையங்கள், சர்வோதயம், காதிபவன், குறளகம், தஞ்சாவூர் பொம்மை வாரியம் ஆகியவற்றிற்கு கொள்முதல் செய்து கடலூர் மாவட்டத்தில் இத்தொழிலை நம்பியுள்ள 600 பொம்மை தொழிலாளர்கள் குடும்பங்களை வாழ வைக்க வேண்டும். மேலும் தொழிலை மேற்கொள்ள அதிக அளவு களிமண் கொண்டு வருவதற்குரிய அனுமதியும் வழங்க வேண்டும், என்றார்.

Tags : Families ,600 Workers , Crashing Toy Industry, 600 Workers', Families
× RELATED மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ்...