×

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கால் முடங்கிய சிறு, குறு தொழில் நிறுவனங்கள்

* ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்பு
* குறுகியகால கடனுதவி வழங்க எதிர்பார்ப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கால் 2 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளது. இதனால், பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். சிறு, குறு தொழில்நிறுவனங்களை காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும், குறுகியகால கடனுதவி வழங்கிடவும்  கோரிக்கை வைத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் பெரியளவில் தொழில்பேட்டைகள் இல்லாத நிலையில், குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள தனியார் சிறு, குறு தொழிலகங்களே உற்பத்தியையும், வேலைவாய்ப்புகளையும் வழங்கி வருகின்றன. திண்டிவனத்திலுள்ள அரசின் தொழிற்பேட்டையில் தொழிலக மின் இணைப்பில்லாததால் ஜெனரேட்டர் மூலம் சில தொழிற்சாலைகள்
மட்டுமே இயங்கி வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் பதிவு பெறாத 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இரும்பு கதவுகள், சுழலும் கதவுகள், லேத்பட்டறைகள், அரிசி ஆலைகள், இரும்பு பீரோ, கைவினைப்பொருள் தயாரிப்புகள், மர வேலைப்பாடுகள், கால்நடைகளுக்கான தீவன தயாரிப்பு ஆலைகள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் இயங்குகின்றன.

இந்த நிறுவனங்களில் சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். புதுவை மாநில எல்லையில் உள்ள வானூர் தாலுகா பட்டானூர் பகுதியில் 300 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன. தற்போது கொரோனா ஊரடங்கால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டதால், இங்கு பணியாற்றி வந்த தமிழகம், புதுச்சேரி மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து, தவித்து வருகின்றனர். இதுகுறித்து சிறு, குறு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கூறுகையில், ஊரடங்கினால் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர்களும் பலர் வெளியூர் பகுதியில் உள்ளதால் அவர்களும் வரமுடியவில்லை. புதுவையிலிருந்து, தமிழகப்பகுதிக்குச் செல்வதற்கு நிறுவனங்களின் உரிமையாளர்களை அனுமதிக்காததால், தொழிலாளர்களை கவனிக்க முடியாத நிலையும், மத்திய அரசின் சில தளர்வுகள் மூலம் அத்தியாவசிய உற்பத்திப்பொருள் தயாரிப்புக்கு வழி ஏற்பட்டபோதும் அந்த பணிகளைச்செய்ய முடியாத நிலையும் உள்ளது. இப்பகுதியில் இரும்பு தளவாட பொருட்கள், அரசு மின்வாரியத்துக்கான மின்மாற்றிபெட்டி, கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு, பழைய இரும்பு பொருட்களை மறுசுழற்சி செய்யும் இரும்பு உருக்கு தொழில் நிறுவனங்கள் உள்ளன. வடமாநிலத்தொழிலாளர்கள் மட்டும் 8ஆயிரம் பேர் வேலை பார்த்து வந்தனர். தற்போது, மின்வாரியத்திலிருந்து, மின்மாற்றி பெட்டி தயாரிப்பதற்கான அனுமதி கிடைத்தும், ஊரடங்கால் இப்பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

இரண்டு மாதங்களாக சிறு, குறு தொழில் முடங்கியுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் எங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தளவாடப் பொருட்களை ஏற்றிவர, தமிழக-புதுவை எல்லையில் அனுமதிக்க வேண்டும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு குறுகியகால கடன்களை வழங்கிட வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவதில் சிறு, குறுதொழில் நிறுவனங்கள் செயல்படுகிறது. எனவே, ஊரடங்கு காலம் முடிந்தவுடன் இந்நிறுவனங்களை காப்பாற்ற அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். தொழில் மூலதனத்தில் 30 சதவீதம் வரை வங்கிக்கடன் வழங்க அரசு பரிந்துரைத்தும், வங்கிகள் கடன் வழங்குவதில்லை. இதைச்செயல்படுத்த வேண்டும். மூலதனக்கடன் பெறாதவர்களுக்கும் புதியகடன் வழங்கிட வேண்டும். தடைக்காலத்தில் மின் கட்டணம் வசூலிக்க, கணக்கீடு எடுக்காத நிலையில், கடந்த மாத மின் கட்டணத்தை செலுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. நிறுவனங்கள் இயங்காத நிலையில் இது தேவையற்றது. நிறுவனங்கள் மீண்டும் செயல்படத்தொடங்கிய பின்னர், மின் அளவீட்டை எடுத்து, அதற்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும். தடைக்காலத்துக்கான வட்டியை வசூலிக்கக்கூடாது. தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டிக்காக செலுத்திய முன் தொகையை அவரவருக்கே திருப்பியளிக்க வேண்டும். முழுமையாக வருமானவரி விலக்களிக்க வேண்டும் என்றார்.



Tags : Micro Enterprises ,Villupuram District , Small,Micro Enterprises, Villupuram District
× RELATED ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கை,...