×

ஊரடங்கு அமலில் இருந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி முடிவுக்கு வந்த கோடை சீசன்

ஊட்டி: கொரோனா காரணமாக கடந்த இரு மாதத்திற்கு மேலாக ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் நீலகிரியில் இந்தாண்டு கோடை சீசன் சுற்றுலா பயணிகள் வருகை முடிவுக்கு வந்தது. நீலகிரி மாவட்டம் சர்வதேச கோடைவாசஸ்தலமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். ஏப்ரல், மே மாதங்களில் 30 லட்சம் பேர் வருகைபுரிவர்.  இந்தாண்டு கோடை சீசனுக்காக தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களிலும் மலர் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் செய்யப்பட்டு வந்தன. அனைத்து பூங்காக்களிலும் பல வண்ண பூக்கள் பூத்து குலுங்கின. இந்த சூழலில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட துவங்கியது. நீலகிரி மாவட்டத்தில் பரவாமல் இருக்கும் வகையில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு கடந்த மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்டது. அதோடு மார்ச் 17ம் தேதியில் முதல் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா காட்சிமுனை உட்பட அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டன. இதுதவிர மேட்டுபாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் மலைரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா ெதாழில் முடங்கி இதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்தனர்.

 ேகாடை சீசனுக்காக நடவு செய்யப்பட்ட செடிகளில் பூத்து குலுங்கிய மலர்களை பார்த்து ரசிக்க சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடின. கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மலர்களால் ஆன கொரோனா அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மலர் அலங்காரங்கள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டன. தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகள் அலங்கார மாடங்களில் அடுக்கப்பட்டன. தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அவர்கள் தாவரவியல் பூங்காவை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இதுமட்டுமின்றி பூங்காவில் ‘தேங்க் யூ கோவிட் 19 வாரியர்ஸ்’ என மலர் அலங்காரம் செய்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்களை தோட்டக்கலைத்துறை கவுரவித்தது. இந்நிலையில் இந்தாண்டு கோடை சீசன் கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகள் பார்வை படாமலேயே நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த சூழலில் ஊட்டியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மலர்கள் அழுக துவங்கியுள்ளன. இதனை தொடர்ந்து பூங்காவை பராமரிக்கும் பணிகளை தோட்டக்கலைத்துறை துவக்கியுள்ளது. முதற்கட்டமாக புல்வெளிகளில் அடுக்கி வைக்கப்பட்ட தொட்டிகள் அகற்றப்பட்டு புல்வெளிகள் பராமரிக்கும் பணிகள் துவங்கியுள்ளது. மேலும் 2வது சீசனுக்காக மலர் செடிகளில் இருந்து விதைகள் சேகரிக்கும் பணிகள் துவங்கியுள்ளது.

Tags : summer season , summer season , without tourists, arriving because , curfew
× RELATED கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்கா மேம்பாட்டு பணி தீவிரம்