×

கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் இதே கதிதான் வருமானமின்றி கருகிய சமையல் கலைஞர்கள் வாழ்வு

* சப்ளையர்ஸ் தொழிலில் செய்த முதலீடு மோசம் போனது
* மின்விளக்கு, மேடை அலங்கார தொழில்களும் இருண்டது

வேலூர்: கொரோனா வைரஸ் தாக்கத்தால் சமையல் கலைஞர்களுக்கு வருமானம் இல்லாமல், வாழ்வாதாரம் களையிழந்து போய்விட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு பலர் வருமானமின்றி தவித்து வருகின்றனர். ஆனால், ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பிறகு வீழ்ச்சியை கண்ட பல்வேறு தொழில்கள் இந்த ஆண்டில் எழுச்சியை காணும் வாய்ப்பு உள்ளது. ஆனால் திருமணம், திருவிழா, சடங்கு போன்ற நிகழ்ச்சிகளில் கூட்டம் சேராமல் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் சமையல் உள்ளிட்ட தொழில்கள் மீண்டு வருவதற்கு வாய்ப்பில்லை என்று வருமானமின்றி தவிக்கும் சமையல் கலைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சுமார் 10 லட்சம் சமையல் கலைஞர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சமையல் கலைஞர்களின் வாழ்வாதாரத்துடன், அவர்களை நம்பியுள்ள காய்கறிகள் நறுக்குபவர்கள், பாத்திரம் சுத்தம் செய்பவர்கள், பந்தியில் உணவு பரிமாறுபவர்கள், இலைகளை எடுப்பவர்கள் என அடிமட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமையல் கலைஞர்கள் கூறுகையில், ‘சமையல் கலை என்பது சாதாரண விஷயம் கிடையாது. அடுப்பின் அனலில் பாடுபட்டு உணவு பொருட்களை பக்குவமாக வேகவைத்து சுவையை அதிகரிக்க வேண்டும். இந்த தொழிலை விருப்பமுடன் செய்பவர்களால் மட்டுமே சாதிக்க முடியும். தமிழகத்தில் சுமார் 10 லட்சம் சமையல் கலைஞர்கள் இருப்பார்கள் என்று தெரிகிறது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக சமையல் கலைஞர்கள் மற்றும் அவர்களை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் திருமண நிகழ்ச்சிகளில் குறைந்த அளவிலான ஆட்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அடுப்பில் கூட கருகாத எங்கள் வாழ்வாதாரம் கொரோனாவால் கருகிவிட்டது. எனவே வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள சமையல் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

இதேபோல் சமையல் பாத்திரங்கள், பந்தல், மின்விளக்குகள் உள்ளிட்டவற்றை வாடகைக்கு கொடுக்கும் சப்ளையர்ஸ் தொழிலும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதுகுறித்து சப்ளையர் தொழில் செய்பவர்கள் கூறியதாவது: சமையல் பாத்திரங்கள், பந்தல், நாற்காலிகள் மற்றும் அலங்கார மின்விளக்குகள் ஆகியன திருமண நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் சப்ளையர் தொழிலை நம்பி பொருட்கள் வாங்குவதில் முதலீடு செய்துள்ளோம். இந்நிலையில் திருமண நிகழ்ச்சிகள் ஆடம்பரம் இல்லாமல் நடப்பதால் பலர் பொருட்களை வாடகைக்கு எடுக்கவில்லை. இதனால் பாத்திரங்கள் துருப்பிடித்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் மின்விளக்கு அலங்காரம் செய்யும் தொழிலாளர்களுக்கும் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருமண நிகழ்ச்சிகளுக்கு 6 மாதங்களுக்கு முன்பாக மேடை அலங்காரத்துக்கு ஆர்டர்கள் கிடைக்கும். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் திருமணங்கள் ஆடம்பரம் இல்லாமல் நடக்கிறது. பலர் திருமணத்தை தள்ளி வைத்துவிட்டனர். இதனால் மேடை அலங்காரம் செய்வதற்காக அட்வான்ஸ் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்கின்றனர். இதனால் அலங்கார பொருட்கள் வாங்குவதற்கு செய்த முதலீடு வீணாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பலர் கடன் வாங்கி அலங்கார பொருட்களை வாங்கி வைத்துள்ளனர். இதனால் திருமண நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட அனைத்து தொழில்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

களையிழந்த அழகு கலை தொழில்
திருமணத்தின்போது மணமகளுக்கு அழகு கலை நிபுணர்கள் மூலம் மேக்கப் போடப்படும். இதற்காக அழகு கலை நிபுணர்கள் திருமண மண்டபத்து பொருட்களை கொண்டு வருவார்கள். அதேபோல் நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் அழகு கலை நிபுணர்கள் மூலம் மணமகள் அலங்கரிக்கப்படுவார். தற்போது கோயில்களிலேயே சாதாரணமாக திருமணங்கள் நடத்தப்படுவதால், மணமகளுக்கு குடும்பத்தினரே மேக்கப் போட தொடங்கிவிட்டனர். மேலும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கும் மருதாணி வைப்பது போன்றவற்றில் கிடைத்த வருமானமும் அழகு கலை நிபுணர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. தற்போது அழகு கலை கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் அழகு கலை தொழிலும் களையிழந்து காணப்படுகிறது.

அலங்கார வாகனமும் முடங்கியது
திருமண நிகழ்ச்சிகளின்போது அலங்கார வாகனத்தில் மணமக்களை அமர வைத்து அழைப்பு வழங்கப்படும். இதற்காக பல லட்சம் செலவழித்து வடிவமைக்கப்பட்ட அலங்கார வாகனங்கள் வாடகைக்கு கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் திருமணங்கள் நடத்துவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அலங்கார வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : chefs ,Corona ,corona curfew , Despite , Corona curfew,same fate ,life , gifted chefs
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...