×

குடித்துவிட்டு தகராறு செய்வதை கண்டித்ததால் இரும்பு ராடால் அடித்து மனைவி கொலை: கணவன் கைது

சென்னை: திருப்போரூர் புதுத்தெரு அடுத்த வள்ளிமான்யம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (30). பன்றி வளர்க்கும் தொழில் செய்கிறார். இவரது மனைவி கனிமொழி (26). இவர்களுக்கு 9 வயதில் மகளும், 6 மற்றும் ஒரு வயதில் மகன்களும் உள்ளனர். முருகனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர், தினமும் குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து உதைப்பது வழக்கம். கனிமொழிக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரும் இல்லாததால் வேறு வழியின்றி கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முருகன் குடித்துவிட்டு வந்துள்ளார். இதை மனைவி கனிமொழி தட்டிக்கேட்டதால், அவரை சரமாரியாக அடித்து உதைத்தார்.

அப்போது, வீட்டில் இருந்த இரும்பு ராடால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை பார்த்ததும், அக்கம்பக்கத்தினர் அவரை, தடுத்தனர். ஆனால் அவர், அவர்களையும் மிரட்டியதால், திரும்பிச் சென்றனர். இந்நிலையில் இரும்பு ராடால் தாக்கியதால் தலை மற்றும் உடலில் பல இடங்களில் காயமடைந்த கனிமொழி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை, அக்கம்பக்கத்தினர் எழுப்பியபோது கனிமொழி இறந்தது தெரிந்தது. இதனால் பயந்துபோன முருகன், மனைவி இயற்கையாக உடல் நலமின்றி இறந்து விட்டதாக கூறி குளிர்பதனப் பெட்டியில் வைத்து தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், திருப்போரூர் போலீசாருக்கு, முருகன் தனது மனைவியை அடித்துக் கொலை செய்து இயற்கை மரணம் போல் சித்தரித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐக்கள் ராஜா, கோதண்டம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில் முருகன், மனைவியை அடித்து கொன்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில், உடலில் தலை உள்பட பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகனை கைது செய்தனர்.Tags : iron rod , Drunk, wife, murder, husband arrested
× RELATED திருப்பத்தூரில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொன்ற கணவன் கைது