×

நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் காய்கறி கடைகளை காலி செய்ய அதிகாரிகள் உத்தரவு: வியாபாரிகள் கடும் எதிர்ப்பு

நெல்லை: நெல்லை டவுன் சுபாஷ் சந்திர போஸ் மார்க்கெட்டில் மொத்தம் 70 கடைகளும், 210 தரைதள கடைகளும் இருந்தன. மார்க்கெட் புதுப்பிப்பு பணிகள் காரணமாக அங்குள்ள கடைகள், நெல்லை பொருட்காட்சி திடல் தற்காலிக பஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் காய்கறி கடையில் கூட்டம் குவிவதை தடுக்கும் வகையில், அங்கு சமூக இடைவெளிக்கு வாய்ப்புகளும் இருந்தன. ஆனால் வியாபாரிகளுக்கு அங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள், வாழைக்காய் காந்தல் போடும் வசதிகள் இல்லாததால் வியாபாரிகள் சிரமப்பட்டனர். மாநகராட்சி அமைத்து கொடுத்த தற்காலிக கழிவறைகள் அசுத்தமாக காட்சியளித்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் காய்கறி கடைகளின் கூரை செட்டுகள் சாய்ந்து விழுந்தன. இதுகுறித்து வியாபாரிகள் சங்கத்தினர் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் பொருட்காட்சி திடலில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வர்த்தக மையம் கட்டுமான பணிகள் தொடங்கியதை சுட்டிக்காட்டி, கடைகளை அங்கிருந்து காலி செய்ய உத்தரவிட்டனர்.

பொருட்காட்சி திடலில் எம்எல்ஏ அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள தகர செட்டுகளில் 86 கடைகளை நடத்தவும், பொருட்காட்சி திடல் முகப்பு பகுதியில் 13 கடைகளை நடத்தவும் கேட்டுக் கொண்டனர். மீதமுள்ள கடைகள் பார்வதி சேஷமகால் எதிர்புறமுள்ள மைதானம், கண்டியப்பேரி உழவர் சந்தை ஆகிய இடங்களுக்கு செல்ல உத்தரவிட்டனர். ஆனால் இதற்கு வியாபாரிகள் சம்மதிக்கவில்லை. ஐகோர்ட் உத்தரவுப்படி தங்களுக்கு ஒரே இடத்தில் கடைகள் நடத்த அனுமதி கேட்டு குவிந்தனர். இதையடுத்து டவுன் பொருட்காட்சி மைதானத்திற்கு வந்த மாநகராட்சி உதவி கமிஷனர்கள் சொர்ணலதா, அய்யப்பன், உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவி வருவாய் அலுவலர் தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு திரண்டு நின்ற வியாபாரிகள் கூறுகையில், ‘கண்டியப்பேரி சந்தை அருகே மருத்துவமனை, ஆதரவற்றோர் முகாம், ஆட்டோ ஸ்டாண்ட், உழவர் சந்தை, சிறுவர்பூங்கா என ஏற்கனவே இடநெருக்கடி அதிகமுள்ளது. நாங்களும் அங்கு சென்றால் நெருக்கடி அதிகரிக்கும். பார்வதி சேஷ மகால் எதிரேயுள்ள மைதானம் மழையில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. வர்த்தக மையம் பணிகள் நடப்பதால் இங்கும் ஜேசிபிக்களும், பொக்லைன்களும் வரத் தொடங்கியுள்ளன. எனவே நாங்கள் முன்புபோல ஒரே இடத்தில் கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் முன்பிருந்த டவுன் நேதாஜி மார்க்கெட்டிற்கே சென்று விடுகிறோம்’’ என்றனர்.

வியாபாரிகளின் கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளாததால், பேச்சுவார்த்தை நீண்டது. மாநகராட்சி அனுமதி பெற்ற கடைகளுக்கு மட்டுமே மாற்று இடம் வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  ஐகோர்ட் உத்தரவின்படி ‘அடிப்படை வசதிகளுடன் கூடிய கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அமைத்து தர வேண்டும். இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரு வோம்’ என வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இப்பிரச்னை தொடர்பாக வியாபாரிகள் சங்கத்தின் கூட்டம், நெல்லை டவுன் பொருட்காட்சி மைதானத்தில் உள்ள தற்காலிக பஸ்நிலைய வளாகத்தில் இன்று நடக்கிறது.Tags : Paddy Town Museum ,vegetable stalls , Officials,evacuate vegetable stalls,Paddy Town Museum
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் சிஎம்டிஏ...