×

லடாக் எல்லையில் சீன ராணுவம் குவிப்பால் பதற்றம்: முப்படை தளபதிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை

புதுடெல்லி: லடாக் எல்லையில் சீனா தனது ராணுவத்தை குவித்து வருவது தொடர்பாக, பிரதமர் மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில எல்லைப் பகுதிகளில் சீனா திடீரென தனது ராணுவத்தை குவித்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக் அருகே தனது விமானப்படை தளத்தை சீனா விரிவுபடுத்துவது, திபெத்தில் உள்ள காரி குன்சா விமான நிலையம் அருகே பெரிய கட்டிடங்கள் எழுப்புவது செயற்கைக்கோள் புகைப்படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. அதில், சீனாவின் ஜெ-11, ஜெ-16 ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக நேற்று முன்தினம் சீன அரசின் இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் நாடு திரும்ப விரும்புபவர்கள் உடனடியாக திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா சாலை அமைப்பதை விரும்பாத சீனா, இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால், லடாக் யூனியன் பிரதேசத்தின் பான்காங் சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் மற்றும் தவுலத் பெக் ஓல்டி எல்லைப் பகுதிகளில் சீனா வேகமாக படைகளை குவித்து வருகிறது. இந்தியாவும் தனது எல்லைக்கு உட்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது.  இதனிடையே, லடாக், சிக்கிம், உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசம் எல்லைப் பகுதிகளில் நடைபெறும் முக்கியமான கட்டமைப்பு பணிகளை மறுஆய்வுக்கு உட்படுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்தும்படி ராணுவ உயர் அதிகாரிகளுக்கு  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ முகாம்களை சீனா அமைத்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதுடன் மட்டுமின்றி, இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் வகையிலும் உள்ளது. சீனாவின் இந்த செயல்களுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ராணுவத் தளபதிகளுடன் கடந்த ஏப்ரல் 13 முதல் 18ம் தேதி வரை நடைபெற இருந்த கமாண்டர்ஸ் மாநாடு, கொரோனா ஊரடங்கினால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்த மாநாடு இரண்டு கட்டமாக நடத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக அந்த மாநாடு இன்று தொடங்கி நாளை மறுநாள் வரையும் நடைபெற உள்ளது. பிறகு ஜூன் மாத இறுதியில் 2ம் கட்டமாக நடத்தப்பட இருக்கிறது.

கடந்த 2017ல் டோக்லாம் எல்லை பிரச்னையில் 73 நாட்கள் மோதல் போக்கு நீடித்த போது, அணு ஆயுதம் கொண்ட இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அச்சம் நிலவியது. அதன் பிறகு தற்போது லடாக் பிரச்னையால் இந்தியா-சீனா இடையே பதற்றம் நீடிப்பதால், போர் மூளும் அச்சம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்தே பிரதமர் மோடி பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு ஆலோசகர், முப்படைத் தளபதி, ராணுவத் தளபதிகள், உள்துறை செயலாளருடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இது நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

Tags : border ,Chinese ,army commanders ,emergency consultation ,Ladakh ,commanders ,Army , Ladakh Border, Chinese Army, Army Commander, Prime Minister
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...