×

இன்று தொடங்கும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்: தவறு ஏற்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை: தேர்வுத் துறை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த பணி மே 27ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.  இதையடுத்து,  விடைத்தாள் திருத்தும் பணி  இன்று காலை 8 மணி முதல் தொடங்க உள்ளது. இ்ந்த பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். 200 மையங்களில் விடைத்தாள் திருத்தப்பட உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் அதிகம் உள்ளதால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்கும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில்இன்று காலை தொடங்கும் விடைத்தாள் திருத்தும் பணியில்  முதன்மைத் தேர்வர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள். நாளை துணை தேர்வர்கள் விடைத்தாள் திருத்துவார்கள். அதற்கு பிறகே ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்த தொடங்குவார்கள்.  விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.  ஆசிரியர்கள் காலை 8.30 மணிக்கு மைய மதிப்பீட்டு முகாமுக்கு வர வேண்டும். விடைத்தாளில் சிவப்பு நிற மையால் மட்டுமே திருத்த வேண்டும். உதவி திருத்துநர்கள் தமக்கு வழங்கப்பட்ட உறையில் சரியான எண்ணிக்கையில் விடைத்தாள்கள் உள்ளனவா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும்.

மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடும் முன்பு விடைத்தாள்களின் பக்கங்களை சரியாக எண்ணிப்பார்க்க வேண்டும். விடைத்தாளில் ஏதாவது குறைபாடு இருந்தால் அதை முதன்மை திருத்துநர்களின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் அதனால் வரும் விளைவுகளுக்கு உதவ திருத்துநர்களே முழுப்பொறுப்பேற்க வேண்டும். அனைத்து பக்கங்களிலும் உள்ள அனைத்து விடைகளும் விடுபடாமல் முழுவதும் சரியாக திருத்தப்பட வேண்டும்.

விடை எழுதாமல் வினா எண் மட்டுமே எழுதியிருந்தால் சிவப்பு மையால் கோடிட வேண்டும். உதவித் திருத்துநர் நிலையில் ஏற்படும் தவறுகள் விடைத்தாள் நகல் பெறுதல், மறுகூட்டல் போன்றவற்றின் போது, கண்டுபிடிக்கப்பட்டால், தாம் ஈடுபட்ட ரகசிய பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதற்கு உரிய ஒழுங்கு நடவடிக்கைக்கு  ஆளாக நேரிடும்.

போக்குவரத்து வசதி ஏற்பாடு
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வரும் ஆசிரியர்களுக்கு வசதியாக போக்குவரத்து ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே செய்துள்ளனர். ஒவ்வொரு முகாம் வாரியாக முக்கிய வழித்தடங்களின் பட்டியல்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு வழித்தடத்துக்கும் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர் நிலையில் போக்குவரத்து பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



Tags : Teachers ,Failure , Plus 2 answer sheet editing, 40 thousand editors, exam department
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...