×

கன்னிப்பூ சாகுபடி தொடக்கம் நாற்று நடவுக்கு ஆட்கள் பற்றாக்குறை: விதைப்பு முறையில் பயிரிட முடிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி தொடங்கியுள்ளது. நாற்று நடவுபணிக்கு ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர். மேலும் விதைப்பு முறையில் பயிரிட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.  குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பபூ என இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை மற்றும் அணைகளில் உள்ள நீரை நம்பி விவசாயிகள் மே மாதத்தில் கன்னிப்பூ சாகுபடி செய்கின்றனர். ஜூன் 1ம் தேதி பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். அணை தண்ணீர் திறப்பதையொட்டி அதற்கு முன்பு சாகுபடி செய்வதற்கான ஆயத்தபணிகளில் குமரி மாவட்ட விவசாயிகள் ஈடுபடுவது வழங்கம். குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை மழை பெய்தது. கடந்த இரு தினங்களாக வெயிலின் தாக்கம் இருந்தது. நேற்று மீண்டும் மழை கொட்டியது. கோடை மழை பெய்ததை வைத்து குமரி மாவட்டத்தில் நெல்சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்து வைத்துள்ளனர்.  மேலும் பறக்கை, பால்குளம், சுசீந்திரம் பகுதியில், விதைப்பு மூலமும், நாற்று மூலமும் சாகுபடி பணி முடிவடைந்துள்ளது. இதனை தவிர தேரேகால்புதூர், தெரிசனம்கோப்பு, தாழக்குடி உள்பட பல பகுதிகளில் நெல் சாகுபடி செய்யும் இடங்களில் நாற்றங்கால் தயார் செய்து வைத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் தற்போது நாற்று நடுவதற்கு ஆட்கள் பற்றாக்குறையாக இருந்து வருகிறது. இதனால் விதைப்பு முறையில் நடவு செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். பருவமழை மற்றும் அணை தண்ணீர் திறந்துவிட்டவுடன், வயலை தண்ணீர் விட்டு உழுது அதன்பிறகு விதைப்பு நெல் பயிரிடப்படவுள்ளது.

 மேலும் களைகொல்லி, மோனோகுரோட்டோபாஸ், பயிர்கள் செழித்து வளர்வதற்கான ஊட்டசத்து மருந்து உள்பட 22 வகையான மருந்துகளை அரசு தடை செய்யமுடிவு செய்துள்ளது. இந்த வகையான மருந்துகள், மலிவான விலையில் கிடைப்பதுடன், வயல்களில் ஏற்றதாக உள்ளது. இதனை தவிர்த்து மற்ற மருந்துகளை அதிக விலைக்கு வாங்கி பயிரிடும் போது, அதிக விளைச்சல் கிடைக்குமா என்பது விவசாயிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே நெல் விவசாயத்தில் போதிய அளவு லாபம் கிடைப்பது இல்லை. இந்நிலையில் அதிக விலைகொடுத்து மருந்து வாங்கி நெல் விவசாயம் செய்வதால், லாபம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயி செண்பசேகரபிள்ளை கூறியதாவது: குமரி மாவட்டத்தில் இருபோக நெல்சாகுபடி நடந்து வருகிறது. தற்போது கன்னிப்பூ சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். கன்னிப்பூ சாகுபடியின்போது அம்பை-16, திருப்பதிசாரம்-5 ஆகிய ரகங்களை பயன்படுத்தப்படுகிறது. பறக்கை, பால்குளம் பகுதியில் விதைப்பு மூலம் சாகுபடி நடந்துள்ளது. சுசீந்திரம், தேரூர் பகுதிகளில் நாற்று நடவு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. மாவட்டத்தில் பிற பகுதியில் நடவுக்கு விவசாய நிலங்களை தயார் செய்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு இருக்கிறது. இதனால் கன்னிப்பூ சாகுபடி செய்யப்படும் பயிருக்கு தண்ணீர் தட்டுபாடு ஏற்படவாய்ப்பு இருக்காது. இருப்பினும் தற்போது நாற்றுநடவுக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. மேலும் ஒரு ஏக்கருக்கு நாற்று நடவு செய்ய ரூ.4 ஆயிரம் செலவு ஆகிறது. இதனால் பல பகுதிகளில் விதைப்பு முறையில் நடவு செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதுபோல் விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் களைக்கொல்லி உள்பட 22 வகையான மருந்துகளை தடை செய்யகூடாது. இதனை தொடர்ந்து பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்றார்.

Tags : Lack ,manpower, maiden cultivation
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...