×

மகன் திருமணத்தில் மயங்கி விழுந்தார் சென்னையை சேர்ந்த வியாபாரி கொரோனாவுக்கு பலி

நாகர்கோவில் : திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சென்னை வியாபாரிக்கு, குமரி மருத்துவக்கல்லூரியில் நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை மணலி பகுதியை சேர்ந்த 63 வயது நிரம்பிய மளிகை கடை வியாபாரி ஒருவர், தனது மகனின் திருமணத்துக்காக நெல்லை மாவட்டம் கூடங்குளத்துக்கு நெருங்கிய உறவினர்களுடன் வந்து இருந்தார். மணமகளின் இல்லத்தில் வைத்து நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் திடீரென வியாபாரி மயங்கி விழுந்தார். அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து கூடங்குளம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று வியாபாரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு கொரோனா பரிசோதனையும் நடந்தது.

இதில் இறந்து போன வியாபாரிக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரது உடல் மிகுந்த பாதுகாப்புடன் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து வியாபாரியின் உடலுடன் வந்த உறவினர்கள் 3 பேருக்கும், போலீசார் 5 பேருக்கும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும்,  திருமணத்தில் பங்கேற்ற குடும்பத்தினருக்கும், மணமகன், மணமகளுக்கும் பரிசோதனை நடக்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து குமரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், முதியவர் இறந்த நிலையில் தான் குமரி மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டார். இப்போது யார் இறந்தாலும் கொரோனா சோதனை நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில்  நடந்த சோதனையில் தான் இறந்தவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது, என கூறினர்.


Tags : korona ,Chennai ,victim ,dealer ,Corona , Son married, Madras, merchant, corona, sacrifice
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...