×

ஸ்ரீவைகுண்டம் அருகே பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிவகளையில் தொல்லியல் அகழாய்வு பணி தொடங்கியது

ஏரல்: ஸ்ரீவைகுண்டம் அருகே பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிவகளையில் தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது.  தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள சிவகளை கிராமத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள தொல்லியல் களத்தை பற்றி ஆசிரியர் சிவகளை மாணிக்கம் கண்டறிந்தார். இவரது ஆய்வில் பழங்கால மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள், கருப்பு, சிவப்பு மண்பாண்டங்கள், கற்கால கருவிகள், சுண்ணாம்பினாலான முதுமக்கள் தாழிகள், எழும்பு கூடுகள், நடுகற்கள், கல்வெட்டுகள், தமிழ் வட்டெழுத்துக்கள், மேட்டு கற்குடி பதிகள், எரிமலைக் குழம்பு ஓடிய பகுதிகள், பழங்காலத்தில் இவ்வழியாக தாமிரபரணி ஓடிய பாதைகள் என அடுக்கடுக்காக பல்வேறு தொல்லியல் எச்சங்கள் சிவகளை பகுதியில் புதைந்து கிடப்பதை கண்டறிந்தார்.

 இதையடுத்து சிவகளையில் தொல்லியல் துறை அகழாய்வு பணி தொடங்கிட எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் ஆகியோர் சிவகளையில் அகழாய்வு செய்ய வேண்டும் என்று தமிழக தொல்லியல் துறையினருக்கு அறிவுறுத்தினர். இதைதொடர்ந்து தமிழக தொல்லியல் துறை, சிவகளை தொல்லியல் களத்தை ஜனவரியில் அகழாய்வு செய்யும் என அரசு அறிவித்தது. ஆனால் அகழாய்வு பணி பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில் தமிழக தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தன் தலைமையில் சிவகளையில் அகழாய்வு பணி நேற்று காலை தொடங்கியது. சிவகளை பரம்பு பகுதியில் ஒரு குழியும், வெள்ளத்திரடு பகுதியில் ஒரு குழியும் மொத்தம் 2 குழிகள் முதலில் தோண்டப்படுகிறது.  இந்த குழிகள் 10 மீட்டர் அகலமும், 10 மீட்டர் நீளத்தில் தோண்டப்பட உள்ளது.



Tags : Srivaikundam ,Shivalai , Srivaikundam, archaeological site, archaeological excavation
× RELATED மீன் இனங்கள் குறித்த ஆய்வை...