×

மீன் இனங்கள் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் வகையில் தாமிரபரணி ஆற்றில் மீன்கள் கணக்கெடுப்பு பணி

* பேராசிரியர்கள் தலைமையில் 6 குழுக்கள் ஈடுபடுகின்றனர்

* பாபநாசம், ஸ்ரீவைகுண்டம் உட்பட 6 இடங்களில் நடக்கிறது

அம்பை : கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் மீன்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதற்காக 6 குழுக்களாக பிரிந்து இப்பணியில் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பொதிகை மலையில் உற்பத்தி ஆகிறது. அடர்ந்த காடுகளுக்கு நடுவே மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி நதி சுமார் 15 கி.மீ தூரம் வனப்பகுதியை கடந்து காரையாறு, மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகிய அணைகளை தழுவி நெல்லை மாநகருக்குள் பாய்ந்து ஓடுகிறது. நெல்லை வழியாக தூத்துக்குடி மாவட்டத்தை கடந்து புன்னை காயல் பகுதியில் மன்னார் வளைகுடா கடலில் கலக்கிறது.

ஆண்டு முழுவதும் வற்றாத பொருநை நதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு பல்வேறு வரலாற்று பாரம்பரியங்களை கொண்டுள்ளது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தாமிரபரணி ஆற்றில் பல்வேறு மீன் இனங்கள் காணப்படுகின்றன. இதில் மொத்தம் 125 சிற்றினங்களை சேர்ந்த மீன்கள் இருப்பதாகவும், அதில் 6 இனங்கள் அழிந்து வரும் பட்டியலிலும், 4 இனங்கள் அச்சுறுத்தப்பட்ட நிலையிலும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் மொத்த மீன் இனங்களில் தாமிரபரணியின் பங்களிப்பு 86 சதவீதம் ஆகும். எண்ணற்ற உள்நாட்டு மீன் இனங்களின் வாழ்விடமாக தாமிரபரணி ஆறு திகழ்கிறது. இங்கு மீன் இனங்கள் குறித்த ஆய்வு நடைபெறுவது மிக குறைவு. மேலும் தாமிரபரணியில் ஏற்படும் மாசுபாடு மற்றும் அந்நிய ஆக்கிரமிப்பு மீன் இனங்களால் நம்முடைய நாட்டு மீன் இனங்கள் அழிந்துவருவதாக மீனவ மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த மீன் இனங்கள் குறித்த ஆய்வை உள்ளூர் மாணவர்கள், பொதுமக்களை ஈடுபடுத்தி மேற்கொள்ளும் நோக்கில் அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்பு மையம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஆழ்வார்குறிச்சி ‌பரம கல்யாணி கல்லூரி சுற்றுச்சூழல் அறிவியல் மையம் மற்றும் சதக்கத்துல்லா கல்லூரியின் விலங்கியல் துறை இணைந்து முதல் முறையாக தாமிரபரணி ஆற்றில் மீன்கள் கணக்கெடுப்பு நடத்துகிறது. இதற்காக கணக்கெடுப்பு பணி மற்றும் அதற்கான பயிற்சி நேற்று நடைபெற்றது.

இதில் பரம கல்யாணி கல்லூரி சுற்றுச்சூழல் மையத்தின் பேராசிரியர்கள் முரளிதரன், சொர்ணம் ஆகியோர் பங்கேற்று கணக்கெடுப்பு பணியை தொடங்கி வைத்தனர். ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் மீன்கள் கணக்கெடுப்பின் நோக்கம் குறித்து பேசினார். ஏ ட்ரீ நிறுவன ஆராய்ச்சியாளர்கள் நிரஜ்சன் முகர்ஜி, சூரிய நாரயணன், கல்லிடை மீனவர் பால்ராஜ் ஆகியோர் மீன்கள் கணக்கெடுப்பு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இதில் நம் தாமிரபரணி இயக்க ஒருங்கிணைப்பாளர் லூர்து, அபூபக்கர், ஏ ட்ரீ அமைப்பின் நிர்வாகிகள் சரவணன், தணிகை வேல் உட்பட 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இன்று (23ம்தேதி) காலை 7 மணி தொடங்கி 9 மணி வரை 6 குழுக்களாக பிரிந்து பாபநாசம், திருப்புடைமருதூர், கோபாலசமுத்திரம், சீவலப்பேரி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

The post மீன் இனங்கள் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் வகையில் தாமிரபரணி ஆற்றில் மீன்கள் கணக்கெடுப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Tamiraparani River ,Papanasam ,Srivaikundam ,Perennial ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பாபநாசம் அருகே 4 கிராம மக்கள் தேர்தல்...