வேறு பெண்ணை மணப்பதற்காக விஷப்பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற கணவன்: கொல்லம் அருகே கொடூரம்

திருவனந்தபுரம்: கேரளாவில் விஷப்பாம்பை கடிக்க வைத்து மனைவியை கணவனே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள அடூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது மகன் சூரஜ்(29). இவருக்கும் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த விஜயசேனன் மகள் உத்ரா(25) என்பவருக்கும் கடந்த 2018ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண்குழந்தை உண்டு. திருமணத்தின் போது வரதட்சணையாக 110 பவுன் நகை மற்றும் கார் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மார்ச் 2ம் தேதி சூரஜ் வீட்டில் வைத்து உத்ராவை பாம்பு கடித்தது. சிகிச்சைக்கு பின்ரன் உடல்நலம் தேறி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த மே 7ம் தேதி உத்ராவை மீண்டும் பாம்பு கடித்ததாக கூறி ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். வீட்டில் பார்த்தபோது ஒரு நல்லபாம்பு இருந்தது தெரியவந்தது. இதற்கிடையே தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி விஜயசேனன் கொல்லம் எஸ்பி ஹரிசங்கரிடம் புகார் அளித்தார். இதுபற்றி தனிப்படை போலீசார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. இதுகுறித்து எஸ்பி ஹரிசங்கர் கூறியதாவது: சூரஜுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை. இதனால் வரதட்சணையாக கொடுத்த நகைகளை கைப்பற்றி மனைவியை கொன்று வேறு பெண்ணை திருமணம் செய்ய முடிவுசெய்தார்.

இவருக்கு பாம்புக்கள் மீது அலாதி பிரியம் உண்டு. பாம்பை வைத்து மனைவியை கொன்றால் யாருக்கும் தெரியாது என்று திட்டமிட்டார். இதற்காக கல்லுவாதுக்கல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ₹5 ஆயிரம் கொடுத்து கட்டுவிரியன் பாம்பை வாங்கியுள்ளார். பின்னர் அதை வைத்து இரவில் உத்ரா தூங்கிய பின்னர் பாம்பை எடுத்து அவரை கடிக்க வைத்துள்ளார். ஆனால், அவர் வலியில் அலறித்துடிக்கவே குடும்பத்தினர் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். இதில் அவர் உடல்நலம் தேறி தாய் வீட்டிற்குச் சென்று ஓய்வெடுத்தார்.

தனது முதல் திட்டம் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் பாம்பை வைத்து உத்ராவை கொலை செய்ய சூரஜ் திட்டமிட்டார். இதற்காக சுரேஷிடம் இருந்து ₹5 ஆயிரத்துக்கு நல்லபாம்பு ஒன்றை வாங்கினார். மே 5ம் தேதி மனைவியை பார்க்க செல்வது போல் அவரது வீட்டுக்கு சென்றார். படுக்கை அறையில் உத்ராவும் குழந்தையும் ஒரு கட்டிலிலும் சூரஜ் அருகில் வேறு கட்டிலிலும் படுத்துள்ளனர். உத்ரா தூங்கிய பின்னர் பாம்பை எடுத்து கடிக்க வைத்துள்ளார். மனைவி துடிதுடித்து சாகும் வரை பார்த்துக்கொண்டிருந்த சூரஜ் அவர் இறந்ததை உறுதி செய்த பின்னரே தூங்கியுள்ளார்.

மறுநாள் காலை எதுவும் நடக்காதது போல் எழுந்து வெளியே சென்றார். பின்னர் உத்ராவை எழுப்ப தாயார் ரேணுகா படுக்கை அறைக்கு சென்ற போது அவர் எழும்பவில்லை. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பாம்பு கடித்து இறந்தது தெரியவந்தது. படுக்கை அறையில் சோதனையிட்ட போது நல்ல பாம்பு கிடந்தது . முதலில் இந்த மரணத்தில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதற்கிடையே இருவரும் படுத்து தூங்கியது ஏசி அறை, அதற்குள் பாம்பு செல்ல முடியாது என்பதால் சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் தான் உத்ராவின் தந்தை மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார் போலீஸ் விசாரணையில் சூரஜ் மனைவியை பாம்பை வைத்து கொன்றதை ஒப்புக்கொண்டார். சூரஜ் மற்றும் பாம்பை விற்பனை செய்த சுரேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>