திருமங்கலம், மேலூரிலிருந்து 2ம் கட்டமாக சொந்த ஊர்களுக்கு கிளம்பிய வடமாநில தொழிலாளர்கள்

திருமங்கலம்/மேலூர்: திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கியிருந்த வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 132 பேர் நேற்று இரண்டாம் கட்டமாக சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் மேலூரிலிருந்தும் 183 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுதலினால் போடப்பட்ட ஊரடங்கினால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்ததையொட்டி சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்லத்துவங்கினர். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் முதற்கட்டமாக 98 வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி சென்றனர். இந்தநிலையில் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் கட்டிட பணிகளை செய்து வந்த 132 பீகார், மத்தியபிரதேசத்தை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் இரண்டாம் கட்டமாக நேற்று திருமங்கலத்திலிருந்து அவர்களது மாநிலத்திற்கு கிளம்பினர். திருமங்கலம் தாலுகா அலுவலகத்திலிருந்து 6 பஸ்களில் இந்த வடமாநில தொழிலாளர்கள் மதுரை ரயில்வே ஸ்டேசனுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஏற்பாடுகளை ஆர்டிஓ சவுந்தர்யா, தாசில்தார் தனலட்சுமி செய்தனர்.

மேலூர் இதேபோல், மேலூர் பகுதியில் வேலை பார்த்த வெளி மாநில தொழிலார்களை 10 பஸ்களில் அவர்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலூர் வெள்ளரிபட்டி, சிட்டம்பட்டி, அரிட்டாபட்டி பகுதிகளில் ஏராளமான வெளி மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். கொரோனா ஊரடங்கால் இவர்கள் படிப்படியாக தங்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே 2 முறை இத்தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று தனியார் ரப்பர், டயர் தொழிற்சாலையில் பணியாற்றிய பீகார் மாநிலத்தை சேர்ந்த 183 தொழிலாளர்கள் 10 பஸ்களில் மேலூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு வைரஸ் தொற்று உள்ளதா என மேலூரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலூரில் இருந்து 10 பஸ்களில் அனுப்பப்பட்டவர்கள் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

Related Stories: