×

குடியிருப்புக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

பந்தலூர்: பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடி பகுதியில் காட்டுயானைகள் தாக்கியதில் தொழிலாளியின் வீடு சேதமடைந்தது. பந்தலூர் அருகே மழவன்சேரம்பாடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில், ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் கூலித்தொழிலாளி ஆறுமுகம் என்பவர் வீட்டை உடைத்து சேதம் செய்தது. வீட்டில் இருந்தவர்கள் யானையை சத்தமிட்டு  விரட்டியுள்ளனர். கூட்டமாக இருந்த யானைகளில் ஒரு யானை தனியாக பிரிந்து அதே  பகுதியை  சேர்ந்த கனகேஸ்வரி என்பவரை துரத்தியுள்ளது . அவர் யானையிடமிருந்து தப்பிக்க ஓடியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.  அக்கம்பக்கம் உள்ளவர்கள் யானையை சத்தமிட்டு துரத்தி கனகேஷ்வரியை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.சம்பவ இடத்திற்கு சேரங்கோடு ஊராட்சி உறுப்பினர் கோபால் சென்று பார்வையிட்டு சேதம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார் சேரம்பாடி வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

யானை தாக்கி தோட்டத் தொழிலாளி காயம் பந்தலூர் தாலுகா பிதர்காடு பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிபவர் ராஜேந்திரன் (55). நேற்று காலை ராஜேந்திரன் மற்றும் சில தொழிலாளர்கள் தேயிலைச் செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென காட்டு யானை தொழிலாளர்களை துரத்தியுள்ளது. அவர்கள் இயந்திரத்தை போட்டுவிட்டு ஓடியுள்ளனர். அப்போது ராஜேந்திரன் தேயிலைச் செடிகளுக்கு இடையே விழுந்துள்ளார். இவரை யானை துதிக்கையால் தாக்கியுள்ளது. கூட இருந்த தொழிலாளர்கள் தொடர்ந்து சத்தம் எழுப்பியதால் யானை அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்று விட்டது.இதே பகுதியை ஒட்டி நேற்று காலை பசுந்தேயிலை பறிக்கச் சென்ற தொழிலாளர்களையும் இதே யானை விரட்டியுள்ளது. தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்த யானை வேறு வழியாக வந்து ராஜேந்திரனை தாக்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் மற்றும் தொழிலாளிகள் ராஜேந்திரனை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் குறித்து பிதர்காடு வனச்சரகர் மனோகரன் மற்றும் காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர். தற்போது கோடை காலம் என்பதாலும், பலாப்பழ சீசன் துவங்கி உள்ளதாலும் பழக்கப்பட்ட காட்டு யானைகள் தேயிலை தோட்டங்கள் விவசாய பகுதிகளுக்கு வரும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் நடமாட வேண்டும் என்றும், தேயிலை மற்றும் காப்பி தோட்ட நிர்வாகங்கள் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளை ஒட்டி தொழிலாளர்கள் பணிக்கு செல்வதற்கு முன்பாக பணியாளர்கள் மூலம் கண்காணித்து பாதுகாப்புடன் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags : Elephants, enter,residence
× RELATED போட்ஸ்வானாவில் கடந்த இரு மாதங்களில்...