×

தந்தையை வைத்து 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய பாசமகள் வாவ்வ்வ்... வொன்டர்புல்: பீகார் சிறுமிக்கு டிரம்ப் மகள் பாராட்டு

புதுடெல்லி: காயமடைந்த தந்தையை சைக்கிளில் அமர வைத்து 1200 கிமீ சைக்கிளை ஓட்டி சொந்த ஊருக்கு அழைத்து வந்த பீகார் சிறுமிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்கா பாராட்டு தெரிவித்துள்ளார். பீகாரை சேர்ந்தவர் மோகன் பஸ்வான். இவர் டெல்லி குருகிராமில் இ-ரிக்க்ஷா ஓட்டும் தொழிலாளி. சமீபத்தில் விபத்தில் காயமடைந்த மோகன் பஸ்வானை பார்க்க அவரது 15 வயது மகள் ஜோதி குமாரி குருகிராம் சென்றுள்ளார். இதற்கிடையே, கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஜோதி குமாரி தந்தையுடனே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வருமானம் இல்லாததால் அவர்கள் தங்கியிருந்த வீட்டை காலி வேண்டிய நிலை ஏற்பட்டது.

எந்த போக்குவரத்து வசதியும் இல்லாததால், பழைய சைக்கிளை வாங்கி அதில் தந்தையை வைத்து சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார் குமாரி.
அதன்படி, குமாரி சைக்கிள் ஓட்ட பின்னால் அவரது தந்தை பையை வைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டார். இரவு பகலாக சைக்கிள் ஓட்டிய சிறுமி, குருகிராமில் இருந்து 1200 கிமீ தொலைவில் பீகாரில் உள்ள தனது சொந்த ஊரை அடைய 7 நாட்கள் ஆனது. சிறுமி, தனது காயமடைந்த தந்தையை வைத்துக் கொண்டு சைக்கிள் ஓட்டி வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் ஏழை மகளை வெகுவாக பாராட்டினர்.

மேலும், இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, சிறுமி ஜோதியின் தைரியத்தையும், திறமையையும் வீண் போக விடமாட்டோம் என்றும், அவருக்கு சைக்கிளிங் விளையாட்டில் உரிய பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்வதாகவும் அறிவித்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவாங்கா டிரம்ப்பும் சிறுமி ஜோதி குமாரியை பாராட்டி உள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘15 வயதான ஜோதி தனது காயமடைந்த தந்தையை பின்னால் அமர வைத்து 1200 கிமீ தொலைவில் உள்ள சொந்த கிராமத்திற்கு 7 நாட்களாக சைக்கிள் ஓட்டி வந்துள்ளார். அவரது அசாத்திய திறமையும், விடாமுயற்சியும், அன்பும் இந்திய மக்களையும், சைக்கிளிங் கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது,’ என பாராட்டி உள்ளார்.


Tags : Trump ,Bihar , Bicycle, Bihar little girl, daughter of Trump
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...