×

அடிப்படை வசதியின்றி குடிசை அமைத்து பாலாற்றின் நடுவில் உணவின்றி வசிக்கும் இருளர் குடும்பங்கள்: வேலையும் இல்லை, குடிக்க தண்ணீரும் இல்லை, தங்க இடமும் இல்லை

சென்னை: செங்கல்பட்டு நகரத்தில் இருந்து  4 கிமீ தூரத்தில் உள்ள  பழவேலி பாலாற்று மணல் திட்டு பகுதியில்  இருளர் இனத்தை சேர்ந்த 25 குடும்பத்தினர் 60 பேர், குழந்தைகளுடன் எவ்வித அடிப்படை வசதி, பாதுகாப்பு, உணவு இல்லாமல் வசித்துவருகின்றனர் . செங்கல்பட்டு நகரில்  உள்ள திருமண மண்டபங்களில் துப்புரவு பணியில் ஈடுபட்ட இந்த இருளர்கள், செங்கல்பட்டு ரேடியோ மலை பகுதியில் குடிசை அமைத்து தங்கினர். ஆனால் அங்கு, போதுமான இடவசதி இல்லாததாலும், அங்குள்ளவர்கள் இருளர்களை காலி செய்யும்படி நெருக்கடி கொடுத்ததாலும் குழந்தைகளுடன் கடந்த 5 மாதத்துக்கு முன் பாலாற்றின் நடுவில் குடியேறினர்.

அங்கு, தற்போதைய கொரோனா ஊரடங்கால் எவ்வித வேலையும் இன்றி ஆற்றில் உள்ள தண்ணீரில் மீன்பிடித்து அதில் கிடைக்கும் மீன்களை சாப்பிடுகின்றனர்.
இதுகுறித்து இருளர் மக்கள் கூறுகையில்,  காலை மற்றும் இரவு நேரங்களில்  திருமண மண்டபங்களில் துடைத்து பெருக்கும் வேலையும்,  பகல் நேரங்களில் பழைய காகிதம் பிளாஸ்டிக் பொருட்களை பொருக்கும் தொழில் செய்தோம். கடந்த 4 மாதமாக மண்டபத்திலும் வேலை இல்லை, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்ததால், அந்த வேலைக்கும் செல்வதில்லை. இதையடுத்து, நாங்கள் தங்கிய ரேடியோ மலை பகுதிக்கு, நகராட்சியில் சார்பில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வரும். அதையும் அங்குள்ள மற்ற சமூகத்தினரே பிடித்துக்கொள்வார்கள்.

இதனால், தினமும் குடிக்க, குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. வேலையும் இல்லை. குடிக்க தண்ணீரும் இல்லை. தங்க இடமும் இல்லை. பின்னர், குடும்பத்தோடு தண்ணீரில் நீந்தி  நடு ஆற்றில் வந்து தங்கிவிட்டோம். ஆற்றில் கிடைக்கும் சிறு சிறு மீன்களை பிடித்து சமைத்து சாப்பிடுகிறோம். இங்கு இடம் தாராளமாக உள்ளது. மழை காற்று வந்தால், குடிசை தண்ணீரில் அடித்து சென்று விடுகிறது.   கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நகர் பகுதியில் பலர் உதவி செய்கிறார்கள். ஆனால், ஆற்றின் நடுவில் உள்ள எங்களுக்கு அரசு சார்பில் எவ்வித பணமோ, அரசி, பருப்பு நிவாரணமோ இதுவரை கிடைக்கவில்லை.

 சிலர் எப்போதாவது சாப்பாடு கொடுப்பார்கள். அதனை வாங்குவதற்கு முதியவர்கள், பெண்கள் மார்பளவு தண்ணீரில் உயிரை பணயம் வைத்து நீந்தி சென்று பெறுகிறோம். யாருக்காவது உடல் நிலை பாதித்தாலும், தண்ணீரில் நீந்திதான் தூக்கி செல்லவேண்டும். ரேஷன் கார்டும் இல்லை. குழந்தைகளை பள்ளியிலும் சேர்க்கவில்லை. ஆற்றில் உள்ள தண்ணீரை குடித்து வாழ்கிறோம் என்றனர்.

Tags : middle ,families ,desert ,cottage , Chengalpattu City, Sand Retreat, Security, Food
× RELATED உலக புவி தினத்தையொட்டி கொப்பம்பட்டி...