×

சம்பளம் கொடுக்க வழியில்லை விற்பனைக்கு வரும் கோயில் விளக்குகள்

திருவனந்தபுரம்: கொரோனாவால் வருமான இழப்பு ஏற்பட்டதால்,  திருவிதாங்கூர்  தேவசம் போர்டுக்கு சொந்தமான கோயில்களில்  உள்ள விளக்குகள், செம்பு  பாத்திரங்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் தேவசம் போர்டுதான்  பெரும்பாலான கோயில்களை  நிர்வகித்து வருகிறது. இங்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு,  குருவாயூர்  தேவசம் போர்டு, கொச்சி தேவசம் போர்டு, மலபார் தேவசம் போர்டு என 4   தேவசம் போர்டுகள் உள்ளன. திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில்   சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளபட 1,248 கோயில்கள் உள்ளன. இங்கு கோயில்  ஊழியர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், சபரிமலை  ஐயப்பன்  கோயிலில் இருந்து தான் பெரும்பாலான வருமானம் கிடைக்கிறது.

கொரோனா   காரணமாக சபரிமலை உள்பட அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளன. பக்தர்கள்   செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோயில் வருமானம் நின்று விட்டதால், தேவசம்போர்டு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை   ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என தேவசம் போர்டு   தலைவர் வாசு கேட்டுக்கொண்டார். ஆனால், இதுவரை அரசு எந்த   நிதி உதவியும் செய்யவில்லை.  இந்நிலையில், நிலைமையை சமாளிப்பதற்காக  கோயில்களில்  அதிகமாக உள்ள பித்தளை, செம்பு விளக்குகள், செம்பு பாத்திரங்களை விற்பனை செய்ய   தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

பெரும்பாலான கோயில்களில்  பயன்படுத்தப்படாமல்  டன் கணக்கில் விளக்குகள், செம்பு பாத்திரங்கள்  வைக்கப்பட்டுள்ளன.  இவற்றை விற்பனை செய்து அதில் வரும் பணத்தை ஊழியர்களுக்கு  சம்பளம் உள்ளிட்ட  செலவுகளை சமாளிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு  தீர்மானித்துள்ளது.  இதையடுத்து, கோயில்களில் உள்ள விளக்கு, செம்பு பாத்திரங்கள்  குறித்த  கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Temple , Corona, Temple Lights, Curfew
× RELATED லாடனேந்தல் வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா