×

திருமணங்கள், திருவிழாக்களை நிறுத்தியதால் பரிதாபம் ஊரடங்கின் ‘கொடூரப்பசிக்கு’ இரையான சமையல்காரர்கள்: ருசியாக உணவளித்தவர்கள் பசியால் வாடும் கொடுமை

காரைக்குடி: கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணங்கள், திருவிழாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், சமையல் கலைஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் அதிக அளவில் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, கண்ணங்குடி, நாட்டரசன்கோட்டை ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமையல் தொழில் சார்ந்தவர்கள் உள்ளனர். காரைக்குடி பகுதியில் மட்டும் காய் வெட்டுவது, சாதம் வடிப்பது உள்ளிட்ட சமையல் உபதொழில் செய்பவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளனர். இவர்கள் வேலைக்கு செல்லும்போது சராசரியாக தினமும் ரூ.600 முதல் ரூ.3,000 வரை சம்பளம் வழங்கப்படும். தற்போது ஊரடங்கால் இவர்கள் அனைவரும் வருமானமின்றி குடும்பம் நடத்த முடியாத நிலைக்கும், அன்றாட உணவுக்கே அல்லாடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சமையல் கலைஞர் திருவேலங்குடி ராமு கூறுகையில், ‘‘எங்களுக்கு வருசத்துக்கு 6 மாதம்தான் நல்ல சீசன் ஆகும். இதில் சம்பாதிப்பதை வைத்துதான் மீதமுள்ள மாதங்களை சமாளிப்போம். தற்போது சீசன் நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளோம். பசி, பட்டினியுடன் இருந்து வருகிறோம். அரசு எங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும்’’ என்றார். இசைக்கலைஞர் சூரக்குடி பழனியப்பன் கூறுகையில்,  ‘‘பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் தான் அதிகளவில் கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமணங்கள் நடக்கும்.  தற்போது ஊரடங்களால் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வருமானம் இன்றி தவித்து வருகிறோம். அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’
என்றார்.

பரிதாப நிலையில் பந்தல் தொழிலாளர்கள்
சிவகங்கை: ஊரடங்கால் சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைக்க முடியாமல் பந்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். வழக்கமாக ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் குறைந்தது ரூ.5 ஆயிரம் முதல் பல லட்சம்  ரூபாய் வரை பந்தல் அமைக்க செலவிடுவர். தற்போது எந்த நிகழ்ச்சியும்  நடக்காததால், பந்தல் அமைக்கும் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், பாகனேரியை சேர்ந்த சண்முகம் கூறுகையில், ‘‘மார்ச் இறுதி முதல் எந்த  நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. இனிமேலும் எப்போது நிகழ்ச்சி நடத்த  அனுமதிக்கப்படும் என தெரியவில்லை. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.  பந்தல் தொழிலில் சிவகங்கை மாவட்டத்தில் பல ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு  வருகின்றனர். அவர்கள் பிழைப்புக்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.  தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கோயில்  விசேஷங்கள், சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உரிய பாதுகாப்புடன் அனுமதி  வழங்க வேண்டும்’’ என்றார்.

Tags : Chefs , culprits ,curfew of the awful curfew, tasting, hungry eaters
× RELATED தொழிலாளர் விதிமுறைகளில் மாற்றம்...