×

200 சிறப்பு ரயில்கள் யாருக்காக இயக்கம்?: ஆன்லைனில் மட்டுமே எப்படி டிக்கெட் பதிவு செய்வது...மத்திய அமைச்சர் அறிவிப்பால் குழப்பத்தில் பொதுமக்கள்...!

டெல்லி: ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 24-ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் தங்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்திற்கு நடந்து சென்ற வண்ணம் உள்ளனர். இதற்கிடையே, பல்வேறு  மாநிலங்களில் சிக்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த மாநிலம் செல்வதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில்வே துறை கடந்த 1ம் தேதி முதல் இயக்கிய 1,565 சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 20 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக உத்தர பிரதேசம் 837, பீகார் 428, மத்திய பிரதேசம் 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை பதிவு செய்துள்ளன. இதுவரை குஜராத்தில் இருந்து 496, மகாராஷ்டிராவில் இருந்து 266, பஞ்சாபில் இருந்து 89, தமிழ்நாட்டில் இருந்து 61 ரயில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும், வெளிமாநில தொழிலார்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல இந்த 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், இதன் டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் எனவும், கால அட்டவணை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் எனவும், விரைவில் சிறப்பு ரயில்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

சிறப்பு ரயில் தொடங்கும் வரையில் தொழிலாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலே பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும், ஜூன் 30 வரையில் பொது ரயில் சேவை இயங்காது என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனால், மத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ள ரயில்கள், பயணிகளுக்காகவா? புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவா? என குழப்பம் ஏற்பட்டுள்ளது. நடந்து செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எப்படி ஆன்லைனில் பதிவு செய்வார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Tags : 200 Special Trains For Whom ?: How to Book Tickets Online Only ...
× RELATED மக்களவை தேர்தல் நிறைவுபெற்றது...