×

அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு 15 ஆயிரம் முழு கவசஉடைகள் நாள்தோறும் அனுப்பி வைப்பு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் நாள்தோறும் 15 ஆயிரம் பிபிஇ- முழு கவச உடைகள் அனுப்பி வைக்கப்படுவதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஜிம்ராஜ் மில்டன் தாக்கல் செய்த மனுவில், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் அவற்றை தடுக்கும் முதன்மை பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  உயிர் காக்கும் சேவைகளில் ஈடுபட்டுள்ள இந்த முதல்நிலைப் பணியாளர்களுக்கு முழு உடல்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முழுமையான விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுகாதார துறை கூடுதல் செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் நாள்தோறும் 15 ஆயிரம் பிபிஇ- முழு கவச உடைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. தமிழக காவல்துறையினர் 7 ஆயிரத்து 850 பேருக்கு முகக்கவசம், கையுறை வழங்குவதற்காக 50 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வார்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு முழு கவச உடை மற்றும் என்.95 முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள்,   கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு பணியாளர்களுக்கு  உயர்தர கையுறை மற்றும் காலணிகள்,  முழு கவச உடைகள் வழங்க சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கில் மேலும் வாதம் செய்ய கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்ட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Tags : Armies ,Govt ,Thousand Armored ,Government Hospitals ,Thousand Armored Armies , All Government Hospitals, Full Armored Trousers, hight court, Tamil Nadu Government
× RELATED அரியலூர் அரசு ஐடிஐயில் மாணவர்கள்...