காஷ்மீரில் ராணுவம் தாக்குதல்: ஹிஸ்புல் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.   காஷ்மீர் மாநிலம், நகர் நவகாடல் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். தொடாந்து நேற்று காலை 8 மணியளவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவன் நகரை சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதின் இயக்க தளபதி எனவும், மற்றொரு தீவிரவாதி வெளிநாட்டை சேர்ந்தவனாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் சிஆர்பிஎப் வீரர் ஒருவரும், காஷ்மீர் போலீஸ்காரர் ஒருவரும் காயம் அடைந்தனர். தீவிரவாதிகளிடம் இருந்து  ஆயுதங்கள், வெடிமருந்து ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

2வது நாளாக பாக். தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கடந்த 12 மணி நேரத்தில் 2 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். திங்களன்று இரவு பூஞ்ச் மாவட்டத்தில் குல்பூர் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக நேற்று காலையும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடர்ந்தது.  இது தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘காலை 7.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவமானது சுந்தர்பானி எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் தாக்குதலை தொடங்கியது. சிறிய ஆயுதங்கள் மற்றும் மார்டர் ரக குண்டுகள் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது,” என்றார்.

Related Stories: