×

சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் முறைகேடு: அதிகாரிகள் ஆய்வு

தாம்பரம்: தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் தினமும் 7 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இதனை சேகரிக்கும் பணியில் 36 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இதில், 25 பேர் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், ஒப்பந்த அடிப்படையில் 100 பேர் பணியாற்றுகின்றனர். இதில், ஒரு நபருக்கு 6 ஆயிரம் வீதம் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், 8 ஆயிரம் வீதம்  வழங்கியதாக ஊழியர்களிடம் ஒப்பந்த நிறுவனம் கையெழுத்து வாங்குவதாகவும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் முறைகேடு நடப்பதாகவும் புகார் எழுந்தது. குறிப்பாக பிளீச்சிங் பவுடர், லைசால், குப்பையை அகற்ற பயன்படும் பொருட்கள், தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் உபகரணங்கள் போன்றவற்றில் மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதேபோல் 7 வாகனங்களில் மூன்று  மட்டுமே சரியாக உள்ளன. மற்றவை பழுதடைந்துள்ளன. ஆனால், பழுது செய்யப்படதாக வாகனங்களும் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சோப்பு, செருப்பு, சீருடை போன்றவை வழங்காமல், வழங்கியதாக கணக்கு காட்டியது, தனியார் மூலம் குப்பை அகற்றப்படுவதில் ஆட்களை அதிகம் கட்டி பணி மோசடி, குறைவான ஆட்கள் மட்டுமே பணிபுரியும் நிலையில் அதிக ஆட்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டியது உள்ளிட்ட புகார் எழுந்தது. மேலும், அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரின் மகள் பெயரில் போலியாக மகளிர் குழு தொடங்கப்பட்டு, அதன் மூலம் மருந்துகள் வாங்கியதாக ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பேரில், பேரூராட்சி இயக்குநர் மற்றும் பேரூராட்சிகளின் ஆய்வு அலுவலர் சிட்லபாக்கம் பேரூராட்சியில் கடந்த சில நாட்களாக இங்குள்ள ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். 8 நாட்களுக்குள் முடிவினை தெரிவிக்கவும் பேரூராட்சி இயக்குநரகம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால், விசாரணை நாட்கள் முடிந்தும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆளும் தரப்பினர் பேரம் பேசுவதாக கூறப்படுகிறது.

எனவே, பேரூராட்சி இயக்குநராகம் உரிய நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சிட்லபாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷனிடம் கேட்டபோது, தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

Tags : Citadelpakkam Bargaining, Solid Waste Management Scheme
× RELATED மின்சார ரயில் சேவை ரத்து