×

ஜோதிமணி எம்.பி.யை தரக்குறைவாக விமர்சித்த கரு.நாகராஜன்: ஜோதிமணிக்கு ஆதரவாக #I_standwith_Jothimani என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை சீரமைக்கும் வகையில் மத்திய அரசு 20 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதார சலுகை ஊக்குவிப்பு அறிவிப்பை மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்தத் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன. இதனிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அவர்களுடன் அமர்ந்து பேசி, வாகனம் ஏற்பாடு செய்தார் ராகுல் காந்தி. இது தொடர்பாக நிர்மலா சீதாராமனிடம் கருத்து கேட்டனர். அதற்கு ஏன் அமர்ந்து பேசிக் கொண்டு.. அவர்களுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு நடந்து செல்லலாமே என்று நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு உருவானது. இந்நிலையில் இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி விவாதம் நடத்தப்பட்டது.

அதில் பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர். இதில் பாஜக தரப்பில் கரு.நாகராஜன், காங்கிரஸ் தரப்பில் கரூர் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது  கரு.நாகராஜன் பேசுகையில் எம்.பி. ஜோதிமணியை தரக்குறைவாக விமர்சனம் செய்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, உடனடியாக விவாதத்திலிருந்து ஜோதிமணி வெளியேறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஜோதிமணிக்கு ஆதரவாகப் பலரும் கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். #I_standwith_Jothimani என்ற ஹேஷ்டேகும் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

பின்னர் டிவிட்டரில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில்; ஊடக விவாதங்களில் பாஜக வினர் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஊடகங்களையும், நெறியாளர்களையும் , எதிர்க்கட்சிகளையும் மிரட்டியே பணிய வைக்கலாம் என்று எண்ணுகின்றனர். பெண் என்றால் கூடுதலாக ஒரு ஆபாச அணுகுமுறை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு பெண்ணை அவருடைய கேரக்டரை சிதைப்பதன் மூலம் பொதுவெளியில் இருந்து வெளியேற்றி விடலாம் என்று பிஜேபி நினைக்குமானால் அவர்கள் ஆபாச அரசியல் என்னிடம் வெற்றியடையாது. எனது நேரமையும்,துணிச்சலும் உலகறியும்.

அதனால்தான்  எனது கரூர் தொகுதிமக்கள் எனது தேர்தலை தாங்களே களம் கண்டதாக கொண்டாடினார்கள். எனது வெற்றி தங்கள் குடும்பத்துப் பெண்ணொருத்தியின் வெற்றியெனெ 4,20,000 வாக்கு வித்தியாசத்தில் மகத்தான் வெற்றியை அளித்தார்கள். இந்தவெற்றி எனது வெற்றியல்ல. சாமானியமக்களின் வெற்றியென உணர்ந்துள்ளேன். பொதுவாழ்வை உண்மை, நேர்மை, அன்பின் வழியே வாழும் ஒரு தவமென உணர்கிறேன். உங்கள் மலிவான  விமர்சனங்களுக்கு நீங்கள் தான் வெட்கப்பட வேண்டும். நான் உறுதியோடு  தொடர்ந்து பயணிப்பேன் என கூறியுள்ளார்.


Tags : Jyotimani MP ,I_standwith_Jothimani Karu Nagarajan , Jyotimani MP, Karu Nagarajan
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...