மாநில அரசுகள் கூடுதல் கடன் பெற விதிக்கப்பட்ட புதிய நிபந்தனைகளை ரத்து செய்க...பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் திட்டங்களை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த, 20  லட்சம் கோடிக்கான  சலுகைகள் அறிவிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி  தெரிவித்திருந்தார். இதன்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 13ம் தேதி முதல் இந்த சலுகை திட்டங்களை அறிவித்து வருகிறார். கடைசியாக, 5வது கட்டமாக நேற்று  7 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், மாநில அரசுகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது

மாநில அரசுகளை போன்றே மத்திய அரசுக்கும் பெரிய அளவில் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த ஏப்ரலில் மாநிலங்களுக்கு வரி பகிர்வாக 46,038 கோடி முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் இழப்பு  மானியங்கள் 12,390 கோடி, ஏப்ரல் முதல் வாரத்தில் மாநிலங்களின் பேரிடர் நிவாரண முன்பணம் 11,092 கோடி, கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளாக சுகாதார அமைச்சகத்தால் 4,113 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மாநிலங்கள்  கடன் பெறுவதற்கான வரம்பு ஒட்டு மொத்த மாநில உற்பத்தியில் 3%என்ற அடிப்படையில் 6.41 லட்சம் கோடியாக அறிவிக்கப்பட்டது.

இதில் 75 சதவீத தொகை கடந்த மார்ச் மாதமே அங்கீகரிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட கடன் அளவில் 14 சதவீதம் மட்டுமே மாநிலங்கள் பெற்றுள்ளன. 86 சதவீதம் இன்னும் பயன்படுத்தப்படவில்லை. இருப்பினும், கடன் வரம்பை 3ல் இருந்து 5  சதவீதமாக உயர்த்துமாறு மாநில அரசுகள் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டுக்கு மட்டுமே பொருந்தும், இதன்மூலம், மாநிலங்களுக்கு கூடுதலாக 4.28 லட்சம் கோடி கிடைக்கும் என மத்தய நிதியமைச்சர் நிர்மலா  சீதாராமன் கூறியுள்ளார்.

இந்நிலையில், ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் திட்டங்களை அறிவித்தற்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் திட்டங்கள் அறிவித்தன் மூலம்  மத்திய அரசின் நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் முடிவை தமிழக அரசிடமே விட வேண்டும். மாநில அரசுகள் கூடுதல் கடன் பெற  விதிக்கப்பட்ட புதிய நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது எனவும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

More
>