ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட விக்கிரவாண்டி- கும்பகோணம் நான்கு வழிச்சாலை திட்ட பணிகள் தொடங்கியது: இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும்

விழுப்புரம்: ஊரடங்கு உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்ட விக்கிரவாண்டி- கும்பகோணம் நான்குவழிச்சாலை திட்டப்பணிகள் மீண்டும் தொடங்கி செயல்பட்டு வருகிறது. விக்கிரவாண்டியிலிருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலை, இருவழிச்சாலையாக இருந்ததை, நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு ரூ.711 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் தொடர்ச்சியாக விக்கிரவாண்டியிலிருந்து, சேத்தியாத்தோப்பு, பின்னலூர் வரை 66 (65.96) கிலோ மீட்டர் தூரத்திற்கு, கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மும்பையை சேர்ந்த ரிலையன்ஸ் இன்பிரா ஸ்டெக்சர் லிட் நிறுவனம் காண்டிராக்ட் எடுத்து, இரண்டாண்டுகளில் நான்கு வழிச்சாலை பணியை செய்து முடிக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கியது. கும்பகோணம்- தஞ்சாவூர் சாலையில் ஆறுகள், சிறுநதிகள், தண்ணீர் பாசன வாய்கால்கள் செல்ல 90 குறும்பாலங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் வாகனங்கள் பைபாஸ் சாலையை பாதுகாப்பாக கடக்க 25 தரைப்பாலங்கள், தென்பெண்ணையாறு, கெடிலம் ஆற்றின் குறுக்கே 2 பாலங்களும், கோலியனூர் கூட்ரோடு, பண்ருட்டி பைபாஸ், வடலூர் பைபாஸ் ஆகிய இடங்களில் 3 ரயில்வே மேம்பாலமும், வடலூர் மருவாய் கிராமம் அருகே பைபாஸில் மேம்பாலம் ஒன்றும் அமைக்கும் பணி நடந்து வந்தன.

 இப்பணிகளை 2020ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தன. இந்நிலையில், நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தடுப்புநடவடிக்கையாக கடந்த மார்ச்25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால், பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்துக்கடைகளும் மூடப்பட்டன. கட்டுமானம், சாலைப்பணிகளும் நிறுத்தப்பட்டன. கடந்த ஒருமாதத்தை கடந்த நிலையில், தமிழகத்தில் கட்டுமானப்பணிகள், சாலைப்பணிகளுக்கு தமிழக அரசு அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தது. சென்னையில் அனுமதி பெற்று இப்பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழக முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விக்கிரவாண்டி- கும்பகோணம் நான்குவழிச்சாலைத் திட்டப்பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. சிறு, குறுபாலங்கள் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. பணிகள் முடிந்த பகுதியில் சாலைப் போடும் பணியில் ஒப்பந்தநிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தஆண்டு இறுதி அல்லது 2021ம் ஆண்டு மே மாதத்திற்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: