×

கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் பெண்களை விட ஆண்கள் அதிக பாதிப்புக்குள்ளாவது ஏன்? டாக்டர் விளக்கம்

சென்னை: உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் மக்களை துவம்சம் செய்து வருகிறது. ஏராளமான மனித உயிர்களை பலி வாங்கி வருகிறது. உலக அளவில் கொரோனா பெண்களைவிட அதிகமாக ஆண்களையே பாதித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.  அந்த வகையில், தமிழகத்தை பொறுத்தவரை 6500க்கும் மேற்பட்ட ஆண்களும், 3500 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன் ஆண்கள் அதிக அளவில் இந்நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறித்து டாக்டர் நந்தினி தேவி அளித்த விளக்கம் வருமாறு:
 கொரோனா வைரஸ் உலகத்தில் மிகவும் வேகமாக பரவி, அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் பாதிப்பு லட்சத்தை நெருங்கி வருகிறது. தமிழகத்தில் பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துவிட்டது.

ஆனால் இவ்வளவு பாதிப்புகளிலும், மிக முக்கியமாக ஒரு விஷயம் மட்டும் நடந்து வருகிறது. அது என்னவென்றால், பெண்களைவிட ஆண்களே இந்நோய் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 6500 ஆண்களும், 3500 பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் கொரோனா பாதிப்பு உலகம் முழுக்க ஆண்களையே அதிகம் பாதித்து வருகிறது.  உலகத்தில் கொரோனாவால் இறப்பு விகிதத்தில் ஆண்கள் 2.8 சதவீதமாகவும், பெண்கள் 1.7 சதவீதமாகவும் உள்ளனர். தொற்று ஏற்படுவதிலும் சரி, பாதிப்பு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படுவதிலும் சரி, ஆண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். சீனாவிலும் அதிகமாக ஆண்களே பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது புகைப்பிடிப்பது.
இது ஒரு காரணமாக இருந்தாலும், மற்ற ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் அதிகமாக பாதிக்கப்படாததற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்திதான்.  இந்த உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி என்பது பொதுவாகவே பெண்களுக்கு அதிகமாக இருக்கும். இதுதான் பெண்களை காப்பாற்றுகிறது. ஏற்கனவே வந்த பல நோய்களுக்கும் கொரோனாவை போன்று ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி, பெண்களுக்கு மற்ற வைரஸ் தொற்றுகள் ஏற்படுவதற்கு, எதிராக செயல்படுகிறது. இதனால் பெண்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுவதில்லை.

 மரபு ரீதியாக, பெண்களுக்கு 2 x குரோமோசோம் இருக்கும். இந்த x குரோமோசோமில் நோய் எதிர்ப்புக்கான புரோட்டீன்கள் அதிகமாக இருக்கும். ஆண்களுக்கு xy குரோமோசோம்கள் இருக்கும். அதில் ஒரு x மட்டும் இருப்பதால் நோய் எதிர்ப்புக்கான காரணிகள் குறைவாக தான் இருக்கும்.  பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இருக்கிறது. இந்த ஹார்மோன், பொதுவாகவே, பெண்களை இதய நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படாமல் காக்கும். தற்போது பெண்களை கொரோனா அதிகம் தாக்காததற்கு  ஈஸ்ட்ரோஜனும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.  சீனாவில் ஆண் எலி, பெண் எலியை சோதனை செய்துள்ளனர். அப்போது பெண் எலியின் கருப்பையை எடுத்து, கொரோனாவை செலுத்தியுள்ளனர். அதில் அந்த பெண் எலி இறந்து விடுகிறது. அதே கருப்பை எடுக்காமல் இருந்த பெண் எலிக்கு, மற்ற எலி போன்று பாதிப்பு ஏற்படவில்லை.

ஆனால் அதே ஆண் எலிக்கு சோதனை செய்யும்போது எந்தவிதமான எதிர்ப்புமில்லை.  இதன்மூலமாக பெண்களுக்கு உள்ள ஈஸ்ட்ரோஜன் நோய்களுக்கும், கொரோனாவுக்கும் எதிரானது என்று அந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்களுக்கு பொதுவாகவே புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதனால் அவர்களுக்கு ஆஸ்துமா, இதய நோய்கள் ஏற்படுகிறது. எனவே, கொரோனா வந்தால், பாதிப்பு அதிகமாகி விபரீதமான நிலைக்கு செல்ல நேரிடுது.

பெண்களுக்கு இந்த நிலை ஏற்படுவது குறைவு. புகைப்பிடிப்பது கொரோனா பாதிப்புக்கு ஒரு காரணமாக கூறப்பட்டாலும் பல நாடுகளில் ஆண்கள்  அதிகமாக புகைப்பிடிக்கின்றனர். ஸ்பெயின் நாட்டில், ஆண்கள் பெண்கள் இருவரும் சமமாக புகைப்பிடிக்கின்றனர்.  ஆனால் அங்கும் ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தான் பெண்களுக்கு உள்ள உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி  காரணமாக கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. சாதாரணமாகவே பெண்களுக்கு, எந்த நோய் வந்தாலும், அதனை எதிர்க்கும்  நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே உருவாகும் தன்மை அதிகமாக உள்ளது. கொரோனா மட்டுமில்லாமல் மற்ற நோய்களும் பெண்களை அவ்வளவு எளிதில் தாக்கிவிடுவதில்லை. பாதிப்புகளும் ஏற்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : men ,women ,Doctor , Corona, World, Women, Men, Doctor
× RELATED மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் ஆண்களைவிட அதிகமாக வாக்களித்த பெண்கள்