×

மக்கள் தலையில் இருமடங்கு மின்கட்டணம்: மின்வாரியம் மீது சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு : முரண்பாடுகளை அரசு களைய நடவடிக்கை

சென்னை: கொரோனா பரவல் காரணமாக மின்பயன்பாடு குறித்து கணக்கெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருமடங்கு மின்கட்டணத்தை மக்கள் தலையில் சுமக்க வேண்டியது இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் வீடு மின் இணைப்புகள்-2 கோடி, வணிகம்-36 லட்சம், குடிசைகள்-11 லட்சம் என மொத்தம் 3 கோடிக்கும் மேலான மின்இணைப்புகள் உள்ளன. இதில், வீடுகளுக்கு 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. 500 யூனிட்டுக்கு கீழ் மானிய விலையில் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக மின்நுகர்வு கணக்கெடுக்கும் பணி நடக்கவில்லை.

இதனால் பொதுமக்கள், ெதாழில் நிறுவனங்கள் மற்றும் கடைகள் பழைய மின் கட்டணத்தையே செலுத்தி உள்ளன. இந்நிலையில் ஜூன் மாதத்தில் கட்டணம் செலுத்தும் போது நான்கு மாதங்களுக்கு (மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ) மொத்தமாக கணக்கீடு செய்யப்படும். அப்போது கிடைக்கும் மொத்த யூனிட்டில், பாதியான அளவு எடுக்கப்பட்டு, பிறகு அது மொத்த யூனிட்டுக்கான தொகையாக மாற்றம் செய்யப்படும். பிறகு இதிலிருந்து நுகர்வோர்  ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் செலுத்திய தொகை கழிக்கப்படும். இவ்வாறு இறுதியாக கிடைக்கும் தொகையை நுகர்வோர் செலுத்த வேண்டும் என வாரியம் தெரிவித்துள்ளது. நான்கு மாதமாக வேலையில்லாமல் இருக்கும் யாரும் இவ்வளவு அதிகமான மின் கட்டணத்தை கட்ட முடியாது. எனவே, இதற்கு ஒரு தீர்வை அரசு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்மார்ட் மீட்டர்அவசியம்
ஸ்மார்ட் மீட்டரில் உள்ள மென்பொருளில் மின்நுகர்வு கணக்கு எடுக்க வேண்டிய தேதி நிறுவப்படும். சம்பந்தப்பட்ட தேதி வந்ததும், மீட்டரானது தானாகவே மின்பயன்பாட்டை கணக்கீடு செய்து வாரியத்தில் உள்ள கணினிக்கு அனுப்பி வைக்கும். மேலும் மின்பயன்பாடு, அதற்கான கட்டணம் குறித்த தகவலை நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் மற்றும் மெயில் மூலமாக அனுப்பி வைக்கும்.

வணிக அளவீட்டு நடைமுறையை பின்பற்ற வேண்டும்
இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில், ‘கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், 4 மாதங்களுக்கான மின்சார உபயோகத்தை ஒரே நேரத்தில் அளவீடு செய்யும் நிலையில், ஒரு ஏ.சி வைத்துள்ள  நடுத்தர குடும்பங்களுக்கே மொத்தமாக உபயோகம் 900 யூனிட்டை தாண்டிவிடும். அந்தநிலையில் அவர்கள் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல்  மின் கட்டணம் செலுத்த நேரிடும். தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்களுக்கான  அளவீட்டை அவர்களே எடுத்து, மின்சார வாரியத்திற்கு அனுப்ப  உத்தரவிட்டுள்ளது. இது போன்ற நடைமுறையை வீடுகளுக்கும் பயன்படுத்த வேண்டும். அப்போது எவ்விதமான பாதிப்பும் இருக்காது’ என்றனர்.

கணக்கீடு செய்யப்படும் முறை
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள மாதிரி கணக்கீட்டு முறை குறித்த அறிவிப்பில், ‘பிப்ரவரி மாதம், வாடிக்கையாளர் ஒருவரின் மின்நுகர்வு 200 யூனிட்டாக இருக்கும் பட்சத்தில், அவர் வாரியத்திற்கு மின் மற்றும் நிலைக் கட்டணத் தொகையுடன் சேர்த்து 170 செலுத்தியிருப்பார். பிறகு ஊரடங்கு காரணமாக முந்தைய மாத மின் கட்டணத்தை செலுத்த வாரியம் அறிவுறுத்தியது. இதன்காரணமாக ஏப்ரல் மாத மின் கட்டணமாக சம்மந்தப்பட்ட மின்நுகர்வோர், முந்தைய கட்டணமான 170யையே செலுத்தியிருப்பார்.

தொடர்ந்து ஜூன் மாதம் கணக்கெடுக்கும் போது 4 மாதங்களுக்கு அளவீடு செய்யப்படும். அப்போது மொத்த மின் நுகர்வு 430 யூனிட்டாக இருக்கும் பட்சத்தில், அதில் பாதியான 215 யூனிட்டுக்கு தொகை கணக்கிடப்படும். பிறகு அது  430 யூனிட்டுக்கான கட்டணமாக மாற்றியமைக்கப்படும். இதன்படி மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான மின் கட்டணம் 550 ஆக இருக்கும்.  சம்மந்தப்பட்ட நுகர்வோர் ஏற்கனவே 170 செலுத்தியிருக்கிறார். இதனால் 550ல் இருந்து 170 கழிக்கப்பட்டு விடும். பிறகு நுகர்வோர் 380யை கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த முறையில், மின் பயன்பாட்டுக்கு ஏற்ப, செலுத்த வேண்டிய தொகை கணக்கீடு செய்யப்படும்’ எனத்தெரிவித்திருந்தது.



Tags : activists ,government , Twice the power supply, electricity, social activists, corona, curfew
× RELATED உலக சுற்றுச்சூழல் தினம்