×

ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி: வடமாநில வாலிபர் கைது

கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம் பகுதியில் ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கீழ்ப்பாக்கம் எல்லீஸ் சாலையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் உள்ளது. கடந்த 15ம் தேதி காலை இந்த ஏடிஎம் மையத்திற்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்றபோது, மெஷின் உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த வங்கி நிர்வாகிகள் இதுபற்றி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பாதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும், அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சுமார் 25 வயது மதிப்புள்ள வடமாநில ஆசாமி ஒருவன் ஏடிஎம் மெஷினை உடைக்க முயன்றதும், முடியாததால் திரும்பி சென்றதும் தெரிந்தது. விசாரணையில், அவன் பீகார் மாநிலத்தை சேர்ந்த அஜய்குமார் பங்கால் (25) என்பதும், மில்லர்ஸ் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி பணிபுரிந்து வந்த இவன், ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்து, வறுமையில் தவித்ததும், எனவே ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதும் தெரிந்தது. புரசைவாக்கம் வெள்ளாள தெருவில் தங்கியிருந்த அஜய்குமார் பங்காலை போலீசார் நேற்று காலை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : North Indian ,Robbery , ATM, burglary, Northland Plaintiff, arrested
× RELATED கடலூரில் தேர்தல் தகராறில் பெண் கொலை...