×

ஊரடங்குக்கு பின்னர் தலைகீழாய் மாறப்போகும் வாழ்க்கை வரவு எட்டணா; செலவு பத்தணா; கடைசியில் துந்தணா!

* பெரிய, சிறிய வணிகர்கள் முதல் சாமானிய மக்கள் வரை எல்லோரின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும்

டிசம்பர் மாதத்திலேயே சீனாவின் வுகானில்  கொரோனாவின் கோரத்தாண்டவம் ஆரம்பித்தாலும் அந்த நாடு விழித்ததே ஜனவரியில் தான்; பிப்ரவரியில் பல நாடுகள் அலறத்துவங்கின. நாம் விழித்ததோ மார்ச் இறுதியில். இதோ 50 நாளை தாண்டி விட்டது. ஏழை, நடுத்தர மக்கள், பெரிய , சிறு, குறு  வணிகர்கள், விவசாயிகள்  என்று எல்லா தரப்பினரும் நொறுங்கிப்போயுள்ளனர்.

* இனி விலைவாசி பர்சை கிழிக்கப்போகிறது; வீட்டு வாடகை முதல் மின் கட்டணம், பலசரக்கு பொருட்கள், காய்கறி விலைகள்  என்று எல்லாமே சிலந்தி வலை போல பின்னப்போகிறதே  என்ற பீதி.
* சிறு வணிகர்களுக்கோ சமூக இடைவெளி உட்பட கட்டுப்பாடுகளால் எதிலும் விலை ஏற்ற வேண்டிய கட்டாயம்; இப்போதே ஏறியபடித்தான்  இருக்கிறது. அப்படியும் அவர்களுக்கு கட்டுப்படியாகவில்லை என்று கதறுகின்றனர்.
* பெரிய வணிகர்களை கேட்கவே வேண்டாம்; இனி முன்பு போல கூட்டமும் வராது; விலையும் ஏற்றாமல் இருக்க முடியாது; விளைவு, வியாபாரம் குறையும், பல ஊழியர்கள் வேலை பறிபோகும்.  
*  இதில் இன்னும் கொடுமை அனுபவிக்கப்போகிறவர்கள் கையேந்தி பவன்கள், தெருவோர மிகச்சிறிய வியாபாரிகள், சலூன், இஸ்திரி போன்ற தொழில் செய்பவர்கள் தான். இவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விட்டது கட்டுப்பாடுகள்.
* ரயில், பஸ், விமான கட்டணங்கள் உயரும் என்பதில் சந்தேகம் இல்லை; பஸ் கட்டணங்கள் இப்போதே உயர ஆரம்பித்துவிட்டன.

ஆம்னி பஸ்களை கேட்க அரசுக்கே தைரியமில்லை. சமூக இடைவெளியால் சீட்டுகள் குறைக்கப்படும்; கட்டணங்கள் ஏறும் என்று கூசாமல் காரணம்  சொல்வார்கள். இப்படி எல்லாவற்றிலும் கடுமையாக பாதிக்கப்படப்போவது சிறிய வணிகர்களும், எளிய மக்களும் தான்; அவர்களுக்கு வரவு எட்டணா என்றால் செலவு பத்தணா என்பது மட்டுமல்ல, இன்னொரு மடங்கு கூட ஏற்படலாம். விளைவு, கடைசியில் துந்தணா தான் என்று பல ஆண்டுக்கு முன் சினிமாவில் பாட்டு வருமே அது இப்போது நனவாகப்போகிறது. மக்களுக்கு மிகப்பெரிய சவால் அடுத்து வரும் சில ஆண்டுகள்  என்பது மட்டும் நிச்சயம்.

சிறு வணிகம் முடங்கினால் நாட்டுக்கு நல்லதல்ல:  ராஜா, பட்டிமன்ற நட்சத்திர பேச்சாளர்:

* டாஸ்மாக்கிற்கு சமூக இடைவெளியுடன் மது கொடுக்கிறீர்கள். அதேபோல, டீ குடிக்கவும் சமூக இடைவெளியுடன் குடிக்க அனுமதிக்கலாமே. ரோட்டோரம் உள்ள இட்லி கடைகள் நிலை என்ன? சிறு வணிகம் தான் பொருளாதாரத்தின் ரத்த ஓட்டம்.

கடந்த 100 ஆண்டுகளில் மனிதகுலம் பார்த்திராத நெருக்கடியை நாம் இப்போது சந்தித்து வருகிறோம். கொரோனா என்ற வைரஸ் உலகம் முழுக்க வலம் வந்து நம் இந்தியாவிலும் நுழைந்து, பல மாநிலங்களில் ஊடுருவி மக்களை பாடாய்படுத்தி வருகிறது. வாழ்க்கையை நொறுக்கி விட்டது. இதை பரவாமல் தடுக்க இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது பிப்ரவரி மாதத்திலேயே, இந்த ஊரடங்கு நிலையை சொல்லியிருந்தால் நாம் கேலி செய்திருப்போம். அதேநேரத்தில், சின்ன அவகாசம் கூட இல்லாத நிலையில், ஊரடங்கு அமலானதால் மனித வாழ்க்கையே முழுவதும் இயங்க முடியாத அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

 இந்த அளவுக்கு ஊரடங்கு நீடிக்கும் என்று சாமானிய மக்களுக்குத் தெரியவில்லை. ஒரு வாரம் அல்லது 2 வாரத்தில் முடிந்து விடும் என்று நினைத்தனர். அறிஞர்கள் சிலர்தான் இது ஜூன் வரை இழுக்கும் என்று கூறியிருந்தனர். ஆனால் சாதாரண மக்களுக்கு இது தெரியாது. 4 மணி நேர அவகாசத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டு விட்டது. பரந்து, விரிந்த இந்த நாடு ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டு விட்டது. இதனால் தற்போது மக்கள் சொல்ல முடியாத அளவுக்கு சிரமப்படத் தொடங்கிவிட்டனர். மக்கள் முதலில் தற்போதைய பிரச்னைகளை எதிர்கொள்ள மனதளவில் தயாராக வேண்டும். சுனாமி வரும்போது, இவ்வளவு பெரிய சேதம்வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதேபோன்று இந்தாண்டின் சுனாமிதான் கொரோனா வடிவில் உலகம் முழுவதும் புரட்டிப்போட்டுள்ளது.

முதலில் சிறு கடைகள், பெரிய கடைகள், நிறுவனங்களின் கட்டமைப்பை சரியாக இருக்கிறதா என்று பார்க்கணும். 2வதாக பொருட்கள் எல்லாம் கெட்டுப்போகாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இதைவிட சிறிய கடைகளில் நிலைமை மிகவும் மோசம். அவர்களுக்கு ரொட்டேஷனில்(சுழற்சி)தான் வண்டி ஓடும். தினமும் பணம் வந்தால்தான், அதை சுழற்சி அடிப்படையில் செலவு செய்வார்கள். இந்த சிறு தொழில்கள் சங்கிலித் தொடர்போன்ற தொடர்புகளை கொண்டவை. ஒரு இடத்தில் அறுந்தாலும், எல்லாம் முடங்கிவிடும். டீ கடையை எடுத்துக் கொண்டால், நான் வீட்டின் அருகில் உள்ள கடையில் மட்டும் டீ குடிப்பதில்லை. யாரையாவது பார்க்கச் சென்றால் அவர்களுடன் சேர்ந்து குடி குடிப்பது வழக்கம். அப்படி என்றால் நாம் டீ சாப்பிட பிளாஸ்க்குடன்தான் செல்ல வேண்டுமா?.

டாஸ்மாக்கிற்கு சமூக இடைவெளியுடன் மது கொடுக்கிறீர்கள். அதேபோல, டீ குடிக்கவும் சமூக இடைவெளியுடன் குடிக்க அனுமதிக்கலாமே. ரோட்டோரம் உள்ள இட்லி கடைகள் நிலை என்ன? சிறு வணிகம் தான் பொருளாதாரத்தின் ரத்த ஓட்டம். அவர்கள் கஷ்டப்பட்டால், முடங்கி விட்டால் பொருளாதாரமே தெருவுக்கு வந்து விடும். இது நாட்டுக்கு நல்லதல்ல. சுழற்சி முறையில் பணம் மாறிக் கொண்டே இருக்கும். ஒரு இடத்தில் அதன் சங்கிலி அறுந்துவிட்டால் பொருளாதாரம் முடங்கிவிடும். இதனால் மக்களிடம் பணம் கிடைக்க அரசு நிர்வாகம் யோசிக்க வேண்டும். வணிகம் பெருக நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 மாதத்திற்கு இந்த பிரச்னை இருக்கும். அதுவரை மக்களிடம் நம்பிக்கையை அரசு விதைக்க வேண்டும். அதை விட்டு விட்டு சீல் வைப்பது, கடையை மூடுவது போன்ற வற்றில் ஈடுபடக்கூடாது. ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் நிலை மோசமாக உள்ளது.

அவர்கள் கடன், வீட்டு வாடகை ஆகியவற்றை கட்ட வேண்டும். அதை விட டிராவல் அண்டு டூர் என்ற துறை உள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் வேலை செய்த பலருக்கு வேலை போய்விட்டது. சாதாரண ஓட்டல்களில் வேலை செய்கிறவர்களின் நிலையை பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் நம்மிடம் சேமிப்பு இருந்தது. 2001ம் ஆண்டுக்குப் பிறகு சேமிப்பு இல்லை. ஆடம்பர செலவு அதிகமாகிவிட்டது. அடுத்த லெவல், அடுத்த லெவல் என்று நாம் கடனுக்கு மேல் கடன் வாங்கி ஆடம்பரமாக இருந்தோம். 21ம் நூற்றாண்டால் நாம் ஏற்படுத்திக் கொண்ட புதிய தலைவலிகள்.  இதை எல்லாம் அரசுதான் யோசிச்சுப் பார்த்து, அடித்தட்டு மக்கள், வாங்கும் திறன் கொண்ட மக்களை கை தூக்கிவிட அரசு துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரடங்கு முடிஞ்சா எல்லாரும் தினுசு தினுசா வெலய ஏத்தப்போறாங்க:  தம்பி ராமய்யா, திரைப்பட நடிகர்:
* மக்கள் அவசியம்றத விட்டுப்புட்டு அத்யாவசியம்ற நிலைக்கு வந்துடுவாங்க. விரலுக்கேத்த வீக்கம்தான் வாழ்க்கைன்னு அவுங்களுக்கும் புரிஞ்சு போச்சு.

மலிவா கிடைக்குதுன்னு சைனா பொருளை வாங்கிட்டு அடிக்கடி அதை ரிப்பேர் சரிபண்ண நாம எம்புட்டு பாடுபடுவோம். அதே மாதிரிதான் இதுவும். சைனா வைரசை வாங்கிட்டு சரிபண்ண முடியாம படாத பாடுபட்டுக்கிட்டிருக்கோம். நம்ம டாக்டருங்க, விஞ்சானிங்க, ரொம்ப புத்திசாலிங்க இதுக்கெல்லாம் சீக்கிரமே மருந்து கண்டு பிடிச்சிடுவாங்க., ஆணானப்பட்ட கொள்ளை நோய், காலரா நோயவே கால்லபோட்டு மிதிச்சவங்க அவுங்க.
கொரோனா தம்பி நமக்கு சில கெடுதல்களை பண்ணியிருகான்.  3 மாசமா வேலசோலி இல்லாம பண்ணிட்டான். நம்ம நாட்டுல 80 சதவிகித ஜனம் அன்னாடங்காச்சிங்றது அவனுக்கு தெரியாமப்போச்சு.

சுத்தமா இருங்க, சுதாதாரமா இருங்க, இயற்கைய நாசம் பண்ணாதீங்க, நல்லவங்கள மதிங்கன்னு நிறைய விஷயத்தை சொல்லி கொடுத்திருக்கான்.
ஊரடங்கு காலத்த எப்படியோ ஊதி தள்ளிடுவோம்னு வச்சிக்குங்க. அதுக்கப்பறம்தான் திரும்புன பக்கமெல்லாம் தினுசு தினுசா வெலய ஏத்தி ஆப்பு வைக்கப் போறாங்க. ஊருக்கு பஸ் ஏறப்போனா நீ இந்த மூலையில உட்காரு, நீ அந்த மூலையில உக்காருன்னு சொல்லி நடுவுல காலியா உட்டுருவாங்க. அட நல்ல சவுகரியமா இருக்கே. காத்தோட்டமா போகலாமேன்னு நினைச்சு சந்தோஷப் பட முடியாது. டிக்கெட் கட்டணத்தை பார்த்து வர்ற மயக்கம் ஊருபோய் சேர்ந்தாலும் தெளியாது. அதுக்காக பஸ்காரங்கள குறை சொல்ல முடியுமா. காலியிடத்துக்கும் சேர்த்து டிக்கெட் போட்டாத்தான், அவுங்க பஸ் ஓட்ட முடியும்.

இனிமே வெளிநாட்டுல ஷூட்டிங் நடக்குமான்னு தெரியல. அப்படியே நடந்தாலும் ஹீரோ, ஹீரோயினை மட்டும் கூட்டிட்டுபோயி ஆடவுட்டு எடுத்துட்டு வந்துடுவாங்கன்னு நினைக்கிறேன். காமெடியன் பாடு கஷ்டம்தான். பஸ்சு மாதிரியே பிளைட்டுலேயும் பாதி பேருதான் போக முடியும்ங்றப்போ அவுங்களும் என்ன பண்ணுவாங்க. மீதி சீட்டுக்கும் சேர்த்துதான் டிக்கெட் போடுவாங்க. பிளைட் என்ன தண்ணியிலயா பறக்குது அவுங்க பக்கமும் நியாயம் இருக்குல்ல. பிளைட்டுல நாலு நாட்டுக்காரன் ஏறுவான். எவன் எந்த நாட்டுலேருந்து கொரோனாவ கூட்டிட்டிக்கிட்டு வர்றான்னு நமக்கென்ன தெரியும். காசு அதிகமா போனாலும் பரவாயில்லை. சேஃபா போயி சேர்ந்துரணும்யான்னுதான் நினைப்போம்.

இந்த டீக்கடைகளை நினைச்சுத்தான் சிரிக்கிறதா, அழுவுறதான்னே தெரியல. வீட்டுல என்னதான் பொண்டாட்டி மணக்க மணக்க டீ போட்டு கொடுத்தாலும் டீக் கடைக்கு போயி, அந்த மரப்பெஞ்சுல கால்மேல கால்போட்டு உட்கார்ந்து, நாலு பேரோட நாலு நல்ல விஷயத்தை பேசி, ஓசியில பேப்பர் படிச்சிட்டு ஒரு டீய ஒரு மணி நேரமா ஊதி ஊதி குடிச்சிட்டு வர்ற சுகம் இனி கிடைக்காதோன்னு பயமா இருக்கு. இனி பொண்டாட்டி புருஷன்மேலயும், புருஷண் பொண்டாட்டி மேல பாசமா இருக்கணும், தும்முறதுக்கெல்லாம் இனி கோர்ட்டுக்கு போக மாட்டாங்க. அத்யாவசிய பொருளை மட்டும்  அளவா உற்பத்தி பண்ணுவாங்க. மக்கள் அவசியம்றத விட்டுப்புட்டு அத்யாவசியம்ற நிலைக்கு வந்துடுவாங்க. விரலுக்கேத்த வீக்கம்தான் வாழ்க்கைன்னு அவுங்களுக்கும் புரிஞ்சு போச்சு.

வேலைவாய்ப்பு குறையும், வேலை குறையும், சம்பளம் குறையும், வேகம் குறையும், டென்ஷன் குறையும்.  ஆனால் விலைவாசி கூடும், வேலை நேரம் கூடும், மொத்தத்துல வரவு குறையும், செலவு அதிகமாகும், கிராமத்தான் பாணியில சொன்னா இனி  வரவு எட்டணா செலவு பத்தணா. ஆனா இதுக்கு யாரையும் குத்தம் சொல்ல முடியாதுங்க. எல்லாம் அந்த கொரோனா பய வேலதான். அவன்கிட்ட மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துகிட்டோம்னா வாழ்க்கை நல்லாருக்கும். ஒரு வருஷத்துக்கு தாக்கு பிடிச்சி ஓட்டிட்டிடோம்னா... அப்புறம் அதுவே பழகி போயிடும்.


மக்களை முதல்ல ரிலீஸ் பண்ணி விடுங்க.. எல்லாம் சரியாயிடும்:  மோகன சுந்தரம், நட்சத்திர பேச்சாளர்:
* டீ கடைகளில் கூட்டம் இல்லை. ஆனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. எங்கு கூட்டம் கூடனுமோ அங்கு கூட்டம் இல்லை. கூட்டம் கூடக் கூடாத இடங்களில்தான் கூட்டம் கூடுகிறது.

கொரோனாவால் ஊரடங்கு விதிக்கப்பட்டதால் மக்களிடம் தொடர்ந்து பயம் உள்ளது. அதேநேரத்தில் மளிகை கடைகளிலும், காய்கறி கடைகளிலும் மக்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் டீ கடைகளில்தான் கூட்டம் இல்லை. அதற்கு காரணம், பார்சலில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். முன்பு பாலித்தீன் கவரில் பார்சல் கட்டிக் கொடுத்தனர். பாலித்தீன் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இனி பார்சல் கட்ட முடியாது. இதனால் டீ கடைகளில் கூட்டம் இல்லை. ஆனால் மதுபான கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. எங்கு கூட்டம் கூடனுமோ அங்கு கூட்டம் இல்லை. கூட்டம் கூடக்கூடாத இடங்களில்தான் கூட்டம் கூடுகிறது.

இந்த நாட்டில் இப்போது மதுதான் அத்தியாவசியம் என்றாகிவிட்டது. குறைந்தது ஆயிரம் ரூபாய்க்கு மது வாங்கிச் செல்கின்றனர். அரசு கொடுத்த ஆயிரம், மதுக்கடைக்கு போய் விட்டது. மக்களுக்கு நேரடியாக பணத்தை எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது. ரோட்டோர கடைகள் எல்லாம் காலியாகிவிட்டது. அவர்களை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் படிக்காதவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் சிறிய, சிறிய கடைகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலை செய்து வந்தனர். ஓட்டலில் சர்வாக இருந்தனர். இப்போது அந்த வேலைகளுக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த படிக்காதவர்கள் வந்து விட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிலை மாறிவிட்டது. இந்த வேலை செய்த தமிழக இளைஞர்களை இப்போது காண முடிவதில்லை. அவர்கள் எல்லாம் எங்கு போய்விட்டார்கள் என்று பார்த்தால், குடிக்க போய் விட்டார்கள்.

வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை எல்லாம் அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவிட்டால் சிறிய, சிறிய தொழில்கள் முற்றிலும் படுத்து விடும். சமூக இடைவெளி முக்கியம். ஓட்டல்களில் ஒரு டேபிளில் 4 பேர் அமரலாம். இனி ஒரு டேபிளில் ஒருவர் என்றால் அப்படி தொழில் நடக்கும்.
தற்போது எல்லா துறையும் பாதிக்கப்பட்டு விட்டது. பல துறைகளைச் சேர்ந்த கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு பேச்சாளர். 20 நாட்கள் கூட்டங்களுக்கு செல்வேன். ஆண்டுக்கு 2 முறை ஐரோப்பியா நாடுகளுக்கு செல்வேன். மாதத்துக்கு ஒரு முறை சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று வந்தேன். இனி 8 மாதத்திற்கு கூட்டம் இல்லை என்று கூறுகின்றனர்.

என்னைப் போன்றவர்களின் நிலை என்ன? இசை கச்சேரி நடத்துபவர்களின் நிலை என்ன?. கொரோனாவுடன் பழக வேண்டும் என்று அரசே கூறிவிட்டது. நமக்கு வேறு வழி இல்லை. கொரோனாவுடன் பழகித்தான் ஆக வேண்டும். தொழில்கள் எல்லாம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும். நம்மை விட அதிக பாதிப்புக்குள்ளான இத்தாலியில் கூட, எல்லாவற்றையும் திறந்து விட்டார்கள். அங்கு, இறப்பும் அதிகம். பாதிப்பும் அதிகம்.  நாம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கனும். மாஸ் அணியனும்னு கண்டிப்பாக சொல்லனும். சென்னையிலதான் படிச்சவங்க அதிகம். நாகரீகம் அதிகம். இங்குதான் பாதிப்பும் அதிகம். எதை எங்கு போய் சொல்ல.

தொழில் ஆரம்பிக்க அனுமதிச்சா, அதை சரி செய்யவே 3 மாதம் ஆகும். யாரிடமும் பணம் இல்லை. இந்த நிலையை நினைச்சுப் பார்த்து, யாரும் அஞ்சு பைசாவ எடுக்க மாட்டாங்க. இப்போ ரூ.20 லட்சம் கோடி கடன் அறிவிச்சிருக்காங்க. அது எல்லாம் கடன்தான். சிறு தொழில்களுக்கு நேரடியாக பணம் கொடுக்கலாம். ஆனால் மக்களுக்கு கொடுத்தா, அது பத்தாதுன்னு சொல்வாங்க. மக்களை ப்ரீயாக விடனும். மக்களும் கொரோனாவோடு பழகிடுவாங்க. சுகாதாரத்துக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை, மக்களுடைய வாழ்வாதாரத்துக்கும் கொடுக்கனும். அமெரிக்காவுல வேலை இல்லன்னா 1700 டாலர் கொடுக்கிறாங்க. அதே மாதிரி நம்மிடம் கொடுக்க பணம் இல்லை.

ஏழை, எளியவர்கள் வாழ வழி ஏற்படுத்தனும். மக்கள முதல்ல ரிலீஸ் பண்ணுங்க. எல்லாம் சரியாகிவிடும். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை நாம வீட்டிலேயே அடைஞ்சு இருக்க முடியாது.

சிங்கத்து கிட்ட தப்பிச்சி புலி கிட்ட சிக்கிட்டோம்:  சூரி, திரைப்பட நடிகர்:
* வரவு எட்டணா, செலவு பத்தணா’ன்னு சொன்ன மூத்தவங்கதான், ‘விரலுக்கு தகுந்த வீக்கம் வேணும்’னும் சொல்லியிருக்காங்க. அதை ஞாபகத்துல வெச்சுக்கணும்.

21ம் நுற்றாண்டுல இந்த மாதிரி ஒரு சம்பவத்தை சந்திப்போம்னு யாருமே எதிர்பார்க்கல. இதுக்கு முன்னாடி எவ்வளவோ இயற்கை சீற்றம் வந்து கோர தாண்டவம் ஆடிட்டு போயிருக்கு. புயலு, மழை, வெள்ளம், சுனாமின்னு நம்மளை ஆட்டிப் படைச்சிருக்கு. ஆனா, இப்ப எங்கிருந்தோ சத்தமில்லாம வந்த ஒரு கிருமி, ஜனங்க எல்லாரையும் சைலன்ட்டாக்கி, உலகத்தையே பரபரப்பாக்கிருச்சி. அடடா, இதுலருந்து நம்ம உசுரை எப்படிடா காப்பாத்த போறோம்னு பதறிட்டோம். கை, காலை கழுவுங்க. தூரமா தள்ளி நின்னு பேசுங்க. யாருகிட்டேயும் கை குலுக்காதீங்க. மாஸ்க் போட்டுக்குங்கன்னு சொன்னாங்க. எல்லாத்தையும் நாம கடைப்பிடிச்சோம்.

இப்ப அந்த வைரசு நம்மளை விட்டுட்டு ஓடிப்போற நிலையில இருக்கு. ரொம்ப சீக்கிரமா பவரு குறைஞ்சிரும்னு நினைக்கிறேன். அதுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிச்சிட்டாங்கன்னா, அந்த வைரசு இங்கனக்குள்ள நிக்காம ஓடிரும். இவ்வளவு நாளா அதுக்கு பயந்து வாழ்ந்துக்கிட்டிருந்த நாம,
இப்ப சிங்கத்து கி்ட்ட இருந்து தப்பிச்சு, புலி கிட்ட வசமா மாட்டிக்கிட்ட கதையாயிருச்சி. கொரோனாவுல இருந்து தப்பிச்சி மேல வரப்போற நாம,
அடுத்து நம்ம வாழ்வாதாரத்துக்கு என்ன பண்cணப் போறோம்னு யோசிக்க வேண்டியிருக்கு.  ஆல்ரெடி வீட்ல இருந்த பணத்தை செலவு பண்ணியாச்சி. அக்கம், பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட கடனைஒடனை வாங்கி ரெண்டு மாசத்தை ஓட்டியாச்சி. இந்த நிலமையில, ஏற்கனவே பார்த்துக்கிட்டிருந்த வேலை கிடைக்கணும். இப்ப முதலாளியில இருந்து தொழிலாளி வரை எல்லாருக்குமே சிரமம்தான்.

நம்ம நிலமை வரவு எட்டணா, செலவு பத்தணா கதையாயிருச்சி. ரெண்டு மாசத்தை எப்படியோ தாண்டி வந்துட்டோம். மூணு லாக்டவுனை பார்த்துட்டோம். ரெண்டு மாச கஷ்டத்தை தாங்கிக்கிட்ட நமக்கு இனிமே வரப்போற கஷ்டம் ஒண்ணும் பெருசில்லை. இதுவும் கடந்து போகும்னு தைரியமா இருக்கணும். உசுரையும் காப்பாத்திக்கிட்டு, பொழப்பையும் பார்க்க வேண்டிய கட்டாயத்துல இருக்கோம்.  பல கோடியில தொழில் பண்ணவங்க, கோடியில நிக்கிறாங்க. கோடியில தொழில் பண்ணவங்க, லட்சத்துக்கு வந்துட்டாங்க. லட்சத்துல பண்ணவங்க, ஆயிரத்துல நிக்கிறாங்க. ஆயிரத்துல இருந்தவங்க, நூறு ருபா கூட இல்லாம இருக்காங்க. இது எல்லாருக்கும் நடக்கிற வரவு எட்டணா, செலவு பத்தணா கதைதான். இனிமே நாம ஆடம்பர செலவுகளை குறைச்சுக்கிட்டு சிக்கனமா இருக்கணும்.

வேலை பார்த்து வாங்குற சம்பளத்தை சேமிக்கணும். நாட்டு நிலமை சீக்கிரமா சரியாயிடும். அதுவரை பொறுமையா இருக்கணும். ‘வரவு எட்டணா, செலவு பத்தணா’ன்னு சொன்ன மூத்தவங்கதான், ‘விரலுக்கு தகுந்த வீக்கம் வேணும்’னும் சொல்லியிருக்காங்க. அதை ஞாபகத்துல வெச்சுக்கணும்.   இந்த நேரத்துல நமக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் தேவை. நம்ம லைப் ஸ்டைலை சேஞ்ச் பண்ணி சுத்தபத்தமா இருக்கணும். எல்லா துறையும் சிரமத்துலதான் இருக்கு. சினிமா துறையும் கஷ்டத்துலதான் இருக்கு. பழையபடி எல்லாம் சரியாகணும். எங்களுக்கும் வேலை கிடைச்சி நாலு காசு சம்பாதிக்கணும். அப்பதான் என்னையே நம்பியிருக்கிற பல தொழிலாளிகளை காப்பாத்த முடியும்.

Tags : Dundana ,Tundana , Curfew, Corona, Corona virus
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...