×

தீவிரமடைகிறது ‘ஆம்பன்’ புயல்:15 மாவட்டங்களில் இடியுடன் மழை,.. வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் வலுப்பெற்று வரும் ‘ஆம்பன்’ புயல் இன்று மேலும் தீவிரம் அடையும் என்பதால் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் மாலை புயலாக(ஆம்பன்) வலுப்பெற்று மேற்கு திசையில் நகர்ந்து வந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு அது அதி தீவிரப் புயலாக மாறியது. இதனால் வங்கக் கடல் பகுதியில் கடும் சீற்றம் நிலவுகிறது. கடல் பரப்பில் சூறாவளிக் காற்று வீசியபடி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக வங்கக்கடலின் தென்பகுதியில் கடும் சூறாவளிக் காற்று மணிக்கு 125 முதல் 135 கிமீ வேகத்தில் வீசும். இடையிடையே 150 கிமீ வேகத்திலும் சூறாவளிக் காற்று சுழன்று வீசும்.

இந்த சூறாவளிக் காற்று நாளை மத்திய வங்கக் கடலின் வடக்குப் பகுதி மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதியில் அதிகரித்து மணிக்கு 160 கிமீ வேகம் முதல் 190 கிமீ வேகத்திலும் வீசும். 20ம் தேதி இது மேலும் அதிகரித்து மணிக்கு 200 கிமீ வேகத்தில் வீசும். இதனால் வங்கக் கடல் பகுதி கடல் சீற்றத்துடனே காணப்படும். அதனால் 20ம் தேதிவரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றனர்.
இதையடுத்து, சென்னை, கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1ல் பிரிவு எண் 2 மற்றும் 4, 5 ஏற்றப்பட்டுள்ளது. இது தவிர எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்கள், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 2 ஏற்றப்பட்டுள்ளன.

தீவிரம் அடைந்துள்ள அம்பன் புயல் நேற்று இரவு ஒடிசாவுக்கு 1140 கிமீ தொலைவிலும், மேற்கு வங்கத்துக்கு 1260 கிமீ தொலைவிலும் மையம் கொண்டு இருந்தது. அது மணிக்கு 3 முதல் 5 கிமீ வேகத்தில் நகரும் தன்மை கொண்டதாக இருந்தது. அது 20ம் தேதி வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கத்தில் கரையைக் கடக்கும். இந்த நிகழ்வின் காரணமாக கிருஷ்ணகிரி சேலம், தர்மபுரி மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்யும்.இது தவிர கோவை, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

Tags : Thundershowers ,districts , Auburn Storm, 15 Districts, Rain, Weather Center
× RELATED இரக்கம் காட்டாத வெயில்; தமிழ்நாட்டில்...