×

24 நாளில் 145 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலி: வைரஸ் பலியைவிட சாலை பலி 10 மடங்கு அதிகம்

புதுடெல்லி: கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைவிட சாலை விபத்தில் இறப்போரின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகமாக உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா நோயாளியை அடையாளங்காட்டும் ‘ஆரோக்யா சேது’ என்ற ஆப்பில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, மொத்தம் 85,940 கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2,752 பேர் இறந்துவிட்டனர். இறப்பு விகிதம் 3.2 சதவீதமாக உள்ளது. சேவ் லைஃப் அறக்கட்டளையின் ஊடக அறிக்கைகளின் அடிப்படையில், 1,200 சாலை விபத்துக்களில் குறைந்தது 381 பேர் உயிரிழந்துள்ளனர். இது கிட்டத்தட்ட 32% இறப்பு விகிதமாக உள்ளது. 2019ம் ஆண்டில் கூட, 100 சாலை விபத்துக்களுக்கு இறப்பு விகிதம் சுமார் 30 ஆக இருந்தது.

மேற்கண்ட அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், ‘மார்ச் 24 முதல் மே 16 வரை நடந்த சாலை விபத்துகளில் 381 பேர் மரணம் அடைந்துள்ளனர். அவர்களில் 145 பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். அவர்கள் தங்களது சொந்த மாநிலத்தில் உள்ள வீடு திரும்பவும், சாலைகளை பாதுகாப்பாக கடந்து செல்வதற்கும், அவசரகால நெறிமுறைகள் வகுக்க வேண்டும். பஸ் டிரைவர்களுக்கு முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்கக்கூடிய ஓய்வு பகுதிகளை ஏற்படுத்த வேண்டும். விபத்து நடக்கும் பகுதிகளை அடையாளம் காண்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை சாலை பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும்.

ஓட்டுநர்களை நீண்ட தூரம் வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது. நன்கு பயிற்சி பெற்ற ஓட்டுனர்களை அனுமதிக்க வேண்டும். சாலை பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் அமைப்புகளின் சார்பில் சாலை பாதுகாப்பு நெட்வொர்க், நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற சாலைகளில் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகளுக்கு தற்காலிக பாதைகளை சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து மத்திய உள்துறை செயலாளருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பாதசாரிகள் பாதிக்கப்படுவதை கவனத்தில் கொண்டு, உள்துறை அமைச்சகம் புலம்பெயர்ந்தோர் அவர்களது வீட்டுக்கு செல்ல சாலைகளில் நடந்து செல்ல அனுமதிக்கக் கூடாது என்று மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, சாலை மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : migrant workers ,road deaths , Migrant workers, kills, virus
× RELATED வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு...