×

முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை: மேட்டூர் அணையை இந்த ஆண்டு முன்கூட்டியே திறப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல்

சென்னை: மேட்டூர் அணை திறப்பது குறித்து முதல்வர்  எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். பாசனத்திற்காக மேட்டூர் அணையை இந்த ஆண்டு முன்கூட்டியே திறப்பது தொடர்பாக நாளை காலை முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உட்பட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு குறையாமல் இருந்தால், டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். கடந்தாண்டு ஜூன் 12ம்தேதி, மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால், அணையில் இருந்து குறித்த நாளில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இரு மாதங்கள் தாமதமாக ஆகஸ்ட் 13ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டு ஜனவரி 28ம் தேதி, அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனிடையே ஆகஸ்ட் 13ம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 276வது நாளாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் உள்ளது. கடந்த 2005-2006ம் ஆண்டில் தொடர்ந்து 427 நாட்கள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறை யாமல் இருந்தது. அதன்பிறகு 14 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 276 நாட்கள் 100 அடிக்கு குறையாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால், நடப்பாண்டில் குறித்த நாளான ஜூன் 12ம்தேதி, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தை பொறுத்தவரையில் வேளாண்துறை அதிகாரிகள், டெல்டா மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பாசனத்திற்காக மேட்டூர் அணையை இந்த ஆண்டு முன்கூட்டியே திறப்பது தொடர்பாக முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.


Tags : Palanisamy ,Metroor ,dam , Chief Minister Palanisamy, Consultancy, Mettur Dam
× RELATED பிளவக்கல் பெரியாறு அணைக்கு தண்ணீர் தேடி வரும் யானைகள்