×

சென்னையில் வேகமாக பரவும் கோரோனா நோய் தொற்று 6 ஆயிரத்தை நெருங்குகிறது : அதிர்ச்சியில் பொதுமக்கள்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 10,108ஆக அதிகரித்துள்ளது. இதில், 2,599 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 435 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.  அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,946 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் கோடம்பாக்கத்தை சேர்ந்த 31 வயது ஆண் மருத்துவர், சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் மருத்துவர், கொரட்டூரை சேர்ந்த 45 வயது பெண் மருத்துவர் ஆகிய மூன்று பேருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி, இருமல் இருந்ததால், ரத்த சோதனை செய்து முடிவுக்காக காத்திருந்தனர். நேற்று முடிவுகள் வந்ததில், மூன்று பேருக்கும் ெகாரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மூன்று பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களுடன் வேலை செய்தவர்கள், குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் என அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவனுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காயச்சல் இருந்ததால் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று சோதனையின் முடிவு வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  மேலும் அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். புழல்:  மாதவரம் மண்டலம், 23வது வார்டுக்கு உட்பட்ட புழல் எம்எம்பள்ளி தெருவை சேர்ந்த 28 வயது செவிலியர், 24வது வார்டு வானவன் நகர் 3வது தெருவை சேர்ந்த 11 வயது சிறுமி, 9 வயது சிறுவன், சாய் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த 23 வயது வாலிபர், சுபாஷ் நகரை சேர்ந்த 48 வயது நபர், அவரது 43 வயது மனைவி, 25வது வார்டு வி.எம்.கே நகர் முதல் தெருவை சேர்ந்த 25 வயது நிறை மாத கர்ப்பிணி, 22வது வார்டு புழல் பாலாஜி நகர் 60 வயது முதியவர் ஆகியோருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இவர்கள் அனைவரையும் மாதவரம் மண்டல் சுகாதாரத் துறையினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பெரம்பூர்: சென்னை திருவிக நகர் மண்டலத்தில் நேற்று 2 காவலர்கள் மற்றும் 2 ரயில்வே போலீசார் உள்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் பணிபுரியும் ஓட்டேரி பனந்தோப்பு காலனியை சேர்ந்த 2 ரயில்வே போலீசாருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளது. புளியந்தோப்பு காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 30 வயது காவலருக்கு  கொரோனா  உறுதியாகியுள்ளது. இவர்  ஸ்டான்லி மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். இதேபோல், வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரியும் 44 வயது அமைச்சு பணியாளர் ஒருவரும் கொரோனா  உறுதியாகியுள்ளது.

செம்பியம் வாஞ்சிநாதன் தெரு வெங்கட்ராமன் தெரு, ஜவகர் தெரு பகுதிகளில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளது. பேசின் பிரிட்ஜ் பகுதியில் 69 வயது நபருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. அயனாவரம் மதுரை தெருவை சேர்ந்த 47 வயது டிரைவர், தலைமை செயலக காவலர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 45 வயது நபர் என  நேற்று ஒரே நாளில் திருவிக நகர் மண்டலத்தில் மட்டும் 14 பேருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதேபோல், தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட கொடுங்கையூர் பகுதியில் 11 பேருக்கும், எம்கேபி நகர் பகுதியில் ஒருவருக்கும், வியாசர்பாடி பகுதியில் 2 பேருக்கும் நேற்று  கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது.

தாம்பரம்: கிழக்கு தாம்பரம், இரும்புலியூர், ரோஜா தோட்டம், 1வது தெருவை சேர்ந்த 58 வயது முதியவர், மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், 5வது குறுக்கு தெருவை சேர்ந்த 38 வயது நபர், தாம்பரம், சானடோரியம், தெற்கு காமராஜ் நகர், வி.வி.கோவில் தெருவை சேர்ந்த 30 வயது பெண் ஆகியோருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டது.

பெண் பலி
ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பல்லவன் சாலை காந்தி நகரை சேர்ந்த 44 வயது பெண்ணுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி இருந்ததால், ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

ஒரே நாளில் 8 பேர் பாதிப்பு
ராயபுரம் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் நாட்டுப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த 2 பேர், வரதமுத்தையா தெருவில் 3 பேர், ஆதியப்பன் தெருவில் ஒருவர், தங்கசாலை, பென்சில் லைன் பகுதியில் ஒருவர், ராயபுரத்தில் ஒருவர் என 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவன் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அந்த மாணவன் தேர்வு எழுத முடியாமல், மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

Tags : public ,Chennai , Madras, Coronal Disease, General
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...