×

கொரோனா ஊரடங்கால் 2 மாதத்தில் திருச்செந்தூர் கோயிலுக்கு ரூ.20 கோடி வருவாய் இழப்பு: விசாக திருவிழா நடைபெறுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

திருச்செந்தூர்: கொரோனா ஊரடங்கால் திருச்செந்தூர் கோயிலுக்கு கடந்த 2 மாதங்களில் ரூ.20 கோடி வரை வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜூன் 4ம் தேதி விசாக திருவிழா நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர். அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழா களைகட்டும். தமிழகம், கேரளா, ஆந்திரா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வர். எழில் கொஞ்சும் கடற்கரையுடன் கோயில் அமைந்துள்ளதால் பலர் குடும்பத்துடன் வருவர். திருச்செந்தூர் கோயிலுக்கு தரிசன டிக்கெட் கட்டணம், தங்கத்தேர் இழுத்தல், நாழிகிணறு கட்டணம், முடி காணிக்கை, காது குத்துதல், கடைகள் வாடகை, கார் பார்க்கிங், உண்டியல் வருமானமாக ஆண்டுக்கு ரூ.60 கோடிக்கு மேல் கிடைத்து வருகிறது.தற்போது கொரோனா ஊரடங்கால் மார்ச் 20ம்தேதி முதல் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆகம விதிப்படி கோயிலில் 9 கால பூஜைகள் மட்டும் நடந்து வருகின்றன.

திருச்செந்தூர் கோயிலை பொறுத்தவரை ஏப்ரல், மே மாதங்களில் தான் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவர். இதனால் அந்த இரு மாதங்களிலும் கோயில் வருமானம் கூடுதலாக ரூ.20 கோடி வரை இருக்கும் எனக்கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் கடந்த 58 நாட்களாக கோயில் மூடப்பட்டுள்ளதால் வருமானம் முற்றிலும் தடைபட்டுள்ளது. முருகக்கடவுள் அவதரித்த விசாகம் நட்சத்திரம் வைகாசி விசாக திருவிழாவாக கொண்டாடப்படும். வருகிற ஜூன் 4ம் தேதி வைகாசி விசாகம் வருகிறது. வழக்கமாக அன்று திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்து முருகனை வழிபடுவதும் சிறப்பு. தற்போதைய ஊரடங்கு நாளை (17ம் ேததி) முடிவுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 4வது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளது. எனவே வைகாசி விசாக திருவிழா நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பக்தர்கள் இல்லை வியாபாரமும் இல்லை
திருச்செந்தூருக்கு பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வருகையின் மூலம் தான் வியாபாரம், வளர்ச்சி என அனைத்தும் உள்ளது. கடந்த 2 மாதங்களாக பக்தர்கள் வராததால்  கோயில் வளாகம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட சிறு, குறு  வியாபாரிகள் வியாபாரமின்றி தவித்து வருகின்றனர். இதுகுறித்து கோயில் வளாக பகுதியில் உள்ள வியாபாரிகள் கூறுகையில், ஊரடங்கால் கோயிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள் திறந்த போதிலும் பக்தர்கள் வராததால் வியாபாரம் இல்லை. எனவே கோயிலை வழிபாட்டிற்கு திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் எங்களது அன்றாட வாழ்வுக்கு வழி பிறக்கும் என்றனர்.

அரசுதான் நடவடிக்கை எடுக்கணும்
திருக்கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏப்ரல், மே மாதம் என்பது கோடை காலம் மட்டுமல்லாமல் திருச்செந்தூரை பொறுத்த வரை சீசன் காலமாகும். இந்த காலங்களில் பக்தர்கள், சுற்றுலாபயணிகள் அதிகளவில் வருவர். இதனால் மற்ற மாதங்களை விட இந்த மாதங்களில் கோயிலுக்கு வருமானம் அதிகளவில் கிடைக்கும். ஊரடங்கால் அந்த வருமானம் முற்றிலும் தடைபட்டுள்ளது. எனினும் அனைத்து பணியாளர்களுக்கும் வழக்கம்போல் சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. வருமானத்தை பெருக்க அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

Tags : Tiruchendur ,devotees ,temple , Rs 20 crores revenue ,Tiruchendur temple , 2 months Expectation ,devotees
× RELATED திருச்செந்தூரில் 2வது நாளாக அலைமோதும்...