×

கொரோனா சூறாவளியால் வாழ்வாதாரத்தை இழந்த கடற்கரை வியாபாரிகள்

* பசி, பட்டினியால் நாள்தோறும் அவதி
* அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை

கடலூர்: கடலூர் சில்வர்பீச் கடற்கரையில் 100க்கும் மேற்பட்ட சிறு கடைகள் உள்ளன. சில்வர்பீச்சின் சிறப்பையும் அங்கு வரும் கூட்டத்தையும் நம்பி இக்கடைகள் இயங்கி வருகின்றன. கடலூர் சில்வர்பீச் சுற்றுலாத்தளம் தமிழ் நாட்டின் இரண்டாவது நீளமான கடற்கரையை கொண்டது. ஆசியாவின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. குதிரையேற்றம் மற்றும் படகு சவாரி உட்பட பல பொழுதுபோக்குகளை தரும் இடமாக இந்த கடற்கரை விளங்குகிறது. சிறார்களின மனதை கவரும் வகையில் ஒரு படகு கூடமும், பூங்காவும் இந்த கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அருகே ஆங்கிலேயர்கள் கட்டிய செயின்ட் டேவிட் கோட்டை சிதலமடைந்து காலத்தின் சாட்சியமாக உள்ளது. பறவைகளின் சரணாலயமாக மாங்குரோவ் காடுகளும் உள்ளன. இதனை பார்க்க சுற்றுலா பயணிகளும், அழகான வெண்மணற்பரப்பையும், அலைகடலையும் ரசித்து பொழுது போக்க மாவட்டம் முழுவதிலிமிருந்து திரளான பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.  

 மக்களின் வருகையை வாழ்வாதாரமாக கொண்டு கடந்த 2004ம் ஆண்டு முதல் நகராட்சி அனுமதி பெற்று இக்கடற்கரையில் சிறு வியாபாரிகள் கடைகளை திறந்தனர். தற்போது 100க்கும் மேற்பட்ட கடைகள் மக்களின் நாவிற்கும், அவர்களின் ஆசைகளுக்கும் தீனிபோடுவதாக உள்ளன. கடலூர்  சில்வர்பீச் கடற்கரையில் சாலையோர வியாபாரிகள், மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ், ஐஸ்கிரீம், பானிபூரி, பஜ்ஜி, சுவிட்கான், நூடுல்ஸ், பொம்மை வளையல் கடைகள், சுண்டல் கடை, பலூன் கடை, பழக்கடைகள் உள்ளிட்ட கடைகளை நடத்தி வருகின்றனர். இக்கடைகளை நடத்துபவர்கள் தேவனாம்பட்டினம், புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர். ஒரு நாளைக்கு வியாபாரம் நடந்தால் ரூ. 500 வரை கிடைக்கும். அந்த வருவாயில் பசியாற, படிப்பு, மருத்துவ செலவிற்கு, வாடகை வீட்டிற்கு என சிறு வணிகர்கள் தங்களது பிழைப்பை நடத்தி வந்தனர். பள்ளி விடுமுறை நாட்கள், சனி, ஞாயிறு நாட்கள், பண்டிகை நாட்கள், குறிப்பாக கோடை விடுமுறை காலம் தான் இவர்களுக்கு வசந்தகாலம். இந்த நாட்களில் தான் அவர்களுக்கு வியாபாரம் களை கட்டி வருவாய் கை கொடுக்கும்.

தற்போதும் அவர்கள் கோடை விடுமுறை காலத்தை மகிழ்ச்சியோடு எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கால் முதல் முதலாக மூடப்பட்டது கடற்கரைகள் தான். கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி சில்வர்பீச் கடற்கரை தடை செய்யப்பட்ட பகுதியாக  அறிவிக்கப்பட்டு அங்கு நடந்து வந்து கடைகள் அனைத்தும் மூடுப்பட்டன. கொரோனா ஊரடங்கு சிறு வணிகர்களின் குடும்பங்களை கண்ணீரில் ஆழ்த்தியது. 50 சதவீதம் சிறு வியாபாரிகளின் குடும்பங்கள் பட்டினி கொடுமைக்கு ஆளாகினர்.  இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. தற்போது பல தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்த போதிலும் கடற்கரைகள் மீதான தடை உத்தரவு நீக்கப்படவில்லை. இதனால் கடற்கரைகளை நம்பி பிழைப்பு நடத்தும் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் கடலூர் சில்வர் பீச் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காக கடற்கரை வணிகர்கள் கண்ணீருடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

கடை நடத்த கடனுதவி வழங்க வேண்டும்
 கடற்கரை சிறுவணிகர் சங்க நிர்வாகி நாகராஜ் கூறுகையில், கடந்த 2004ம் ஆண்டு அன்றைய மாவட்ட ஆட்சியர் ககன்தீப்சிங் பேடி. எஸ்.பி பிரேம்குமார், நகராட்சி ஆணையர் செல்லப்பா ஆகியோர் எங்களுக்கு நகராட்சி அனுமதி பெற்று தந்து கடைகள் நடத்த அனுமதித்தனர். விரைவில் கடலூர் சில்வர்பீச் கடற்கரை திறந்து கடைகள் செயல்பட அனுமதி வழங்க வேண்டும். நாங்கள் உரிய சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் உள்ளிட்ட சுகாதார விதிமுறைகளை கடைபிடித்து வியாபாரம் செய்வோம். கடைக்கு வருபவர்களையும் அவ்வாறு விதிமுறைகளை கடைபிடிக்கச் செய்வோம்.  நாங்கள் மீண்டும் கடை நடத்துவதற்கு ஒவ்வொரு கடைகளுக்கும் ரூ. 5 ஆயிரம் கடனுதவியை மானியத்துடன் அரசாங்கம் வழங்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் இலவசமாக கடைகள் நடத்த லைசென்ஸ் வழங்க வேண்டும். மேலும் சிறு வணிகர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கடலூர் சில்வர்பீச்சை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரும் இடமாக உருவாக்க வேண்டும் என்றார்.

Tags : Beach merchants ,Hurricane Corona , Beach merchants , livelihood , Hurricane Corona
× RELATED 50 நாளாக பறிபோன ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம்: பசியில் வாடுகிறார்கள்