×

அதிர்ச்சியில் தந்தை பலியான நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற மகனும் மருத்துவமனையில் மரணம்

சென்னை: ஆவடி அடுத்த திருநின்றவூர், கோமதிபுரம் பகுதியில் ஓய்வுபெற்ற 65 வயது மதிக்கத்தக்க தலைமை ஆசிரியர் ஒருவர் வசித்து வந்தார். கடந்த 11ம்தேதி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செய்த பரிசோதனையில் இவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. தகவலறிந்ததும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள்அவரை அரசு மருத்துவமனையில்  சேர்க்கவில்லை.  இதனையடுத்து, அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு வீட்டிலேயே தனியறையில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி இரவு மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அறிந்த அவரது 90 வயது தந்தை அதிர்ச்சியில் இறந்தார்.

இதையடுத்து, மறுநாள் காலை 11 மணியளவில் மாவட்ட சுகாதாரத்துறை, திருநின்றவூர் பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மரணமடைந்த தலைமையாசிரியரின் தந்தை உடலை தகனம் செய்வதற்கு முன்பாக டாக்டர் குழுவினர் தொற்று உள்ளதா என்பதற்கான மாதிரிகளை எடுத்தனர். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், அவரது மகன், வேலைக்காரி ஆகியோரையும் தனிமைப்படுத்தினர்.  

பிறகு போலீசார் மற்றும் அதிகாரிகள் முதியவர் உடலை மீட்டு உறவினர் முன்னிலையில் கிருஷ்ணாபுரத்தில் உள்ள எரிவாயு தகன மேடையில் தகனம் செய்தனர். இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தலைமையாசிரியர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இது, திருநின்றவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Coroner ,hospital , Father killed, corona, son, hospital, death
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...