×

தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: இறப்பு 71 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,108 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 11,672 பேருக்கு சோதனை செய்யப்பட்ட நிலையில் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 385 பேரும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 49 பேரும் அடங்குவர். இவர்களில் 40 பேர் மகாராஷ்டிராவில் இருந்தும்,  6 பேர் மாலத்தீவில் இருந்தும், 2 பேர் குஜராத்தில் இருந்தும், ஒரு நபர் கர்நாடகாவில் இருந்தும் தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

நேற்று பாதிக்கப்பட்ட 434 பேரில் அதிகபட்சமாக சென்னையில் 309 பேருக்கும், திருவள்ளூர் 21, செங்கல்பட்டு 20, காஞ்சிபுரம் 11, மதுரை, தேனி தலா 6, திருவண்ணாமலை, கடலூரில் தலா 3, பெரம்பலூர் 2, திண்டுக்கல், தென்காசி, தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியானது. இதன் காரணமாக, தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,108 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 5,946 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 359 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,599 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 7,435 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சர்க்கரை, நுரையீரல் பிரச்னைகளுடன் ெகாரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 53 வயது பெண், நுரையீரல் பிரச்னையுடன் கொரோானாவுக்கு சிகிச்சை பெற்ற 32 வயது ஆண், ஓமந்தூரார் மருத்துவமனையில் 57 வயது ஆண், ஸ்டான்லி மருத்துவமனையில் சர்க்கரை, இதயநோய் மற்றும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற 61 வயது ஆண், தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 34 வயது ஆண் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் இருவர் 32 மற்றும் 34 வயது இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 12 வயது வரை உள்ள 583 குழந்தைகளும், 13 முதல் 60 வயதுடைய 8,812 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 713 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளி நாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னை மற்றும் திருச்சி வருபவர்கள் நேரடியாக தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.  அதன்படி கடந்த 9ம் தேதி முதல் நேற்று வரை சென்னை விமான நிலையத்திற்கு 7 விமானங்கள் வந்துள்ளன. இதில் வந்த 1,277 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இவர்களில் 1,082 பேருக்கு பாதிப்பு இல்லை. 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 186 பேரின் மாதிரி முடிவு வரவேண்டியுள்ளது. திருச்சி விமான நிலையத்திற்கு வந்த 184 பேருக்கு சோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.

வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வந்த 49 பேருக்கு கொரோனா
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களில் 49 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிராவில் இருந்து வந்த 40 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வந்தவர்களில் தலா ஒருவரும், மதுரைக்கு வந்த 5 பேர், தூத்துக்குடிக்கு வந்த 10 பேர், நெல்லைக்கு வந்த 22 பேருக்கும் கொரோனா தாக்கியுள்ளது. மாலத்தீவில் இருந்து வந்த 6 பேரில் சென்னை, புதுக்கோட்டைக்கு வந்த தலா ஒருவர், கன்னியாகுமரிக்கு வந்த 4 பேருக்கும், ராணிப்பேட்டைக்கு குஜராத்தில் இருந்து வந்த 2 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து விருதுநகருக்கு வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்புள்ளது.

Tags : Tamil Nadu ,deaths ,coronation deaths , Tamil, corona, curfew, corona virus
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...