×

ஊரடங்கால் முடங்கிய இயல்பு வாழ்க்கை பசியாற்ற பரிதவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள்: ரேஷன்கார்டு இல்லாததால் சலுகைகள் கிடைக்கவில்லை

போச்சம்பள்ளி: ‘‘உடலை மறைக்க வண்ண உடைகள், அதன் மீது விதம்விதமான பாசிமணிகள், தலையில் கம்பீரத்  தலைப் பாகை,நெற்றியில் மங்கலப் பொட்டு,  தோளில் ஒலி எழுப்பும் கொட்டு, வழித்துணையாக ஒரு காளை மாடு,’’ இப்படி வீடு தோறும் வந்து, கவனம் ஈர்த்து கையேந்தி நிற்கும் விந்தை மனிதர்களை இப்போதும் நாம் வீதிகளில் காணலாம். இவர்களை ‘பூம்பூம்மாட்டுக்காரர்கள்’ என்று வியப்போடு அழைக்கிறது சமூகம். ஆனால் இவர்களின் வாழ்வில் விடியல் என்பது பலஆண்டுகளாக கனவாகவே உள்ளது. அதிலும் தற்போதைய கொரோனா வைரஸ் ஊரடங்கு, இவர்களை திக்குத் தெரியாத காட்டில் தவிக்க வைத்துள்ளது. இந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரிதவித்து நிற்கும் பூம்பூம்மாட்டுக்காரர் சமூக மக்களுக்கு அரசு கரம் கொடுத்து உதவுவதோடு, அவர்களின் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலிக்க வேண்டும் என்ற  கோரிக்கை எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த பாலாஜி நகரில் 50க்கும் மேற்பட்ட பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்கள் வசிக்கிறது. அவர்களாகவே தங்கள் முயற்சியில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். 50 குடும்பங்களில் 30 பேருக்கு மட்டுமே ரேஷன்கார்டு உள்ளது. அதோடு இந்த குடும்பங்களை சேர்ந்த 70 பேருக்கு மட்டுமே வாக்குரிமை உள்ளது. இதில் முக்கியமாக சாதி சான்றிதழ் என்பது தான், இவர்களது பல்லாண்டு கோரிக்கையாக உள்ளது. இதற்காக பல்வேறு வழிகளில் அரசை வலியுறுத்தியும் பலனில்லை என்பது தான் பரிதாபம். இது போன்ற சூழல்களால் இவர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைப்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

இது குறித்து பாலாஜிநகர் பூம்பூம்மாட்டுகாரர் சமூக மக்கள் கூறியதாவது: கடந்த ‘‘20 ஆண்டுகளுக்கு மேலாக பாலாஜி நகரில்  குடியிருந்து வருகிறோம். ஊர் ஊராக சென்று மாட்டை வைத்து வித்தைகாட்டி பிழைத்து வருகிறோம். எங்களின் சாதி என்ன?  என்பதை அங்கீகராம் செய்து அரசு சான்றிதழ் தரவில்லை. இதனால் நாங்களும் படிக்கவில்லை. எங்கள் குழந்தைகளையும் படிக்க வைக்க முடியவில்லை. ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் கிடைக்கிறது. இல்லாதவர்கள் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலையில் வாழ்கிறோம். கல்வி அறிவும் இல்லாததால் வேறு எங்கும் சென்று பிழைக்க முடியவில்லை. இதனால் சொந்த சொந்த நாட்டிலேயே,  பல ஆண்டுகளாக அகதிகளை  போல வாழ்கிறோம். பல குடும்பங்களுக்கு ஓட்டுரிமையும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் 40நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் கொரோனா ஊரடங்கால், மாடுகளை பிடித்துக் கொண்டு வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வசிப்பிடங்களிலேயே முடங்கிக் கிடக்கிறோம். யாராவது வந்து உணவு கொடுத்தால், ஒரு வேளை பசி தீருகிறது. இப்படியே சென்றால் எங்களது எதிர்காலம் என்னவாகும்? என்பதே தெரியவில்லை. எனவே அடுத்து வரும் நாட்களில் அரசு எங்கள் மீது கரிசனம் காட்ட வேண்டும். சாதிசான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுத்து, எங்கள் குழந்தைகளின் கல்விக்கு வழிகாட்ட வேண்டும். இல்லாவிட்டால் எங்களை போல், அவர்களின் எதிர்காலமும் வீணாகி விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 எதிர்காலம் கேள்விக்குறி
‘‘குருகுல கல்வி காலத்தில் இருந்து இன்று கம்ப்யூட்டர் கல்வி காலம் வரை மனிதனின் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாக  ஜாதி என்ற அடையாளம் இருக்கிறது. ஆனால் இவர்களை எந்த சாதிப்பட்டியலில் சேர்ப்பது என்ற குழப்பம் ஆண்டாண்டு காலமாய் நீடித்து வருகிறது. எந்த அதிகாரியிடம் விண்ணப்பித்தாலும் ஏதாவது ஒரு காரணம் கூறி, சாதி சான்றிதழ் வழங்காமல் தவிர்த்து விடுகின்றனர். இதனால் குழந்தைகளின் கல்வி  கேள்விக்குறியாகி வருகிறது. இரக்கப்பட்ட சில பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெயர் சேர்க்காமல் எழுத, படிக்க கற்றுக்கொடுக்கிறார்கள். இப்படி இவர்கள் படித்தாலும் அதற்கான சான்றிதழ் கிடைப்பதில்லை. பிறகு எதற்காக வீண் செலவு? என்று கூறி, எழுத்தறிவு பெறுவதை கூட தவிர்த்து வருகின்றனர். எனவே நரிக்குறவர்களை போல, இவர்களுக்கும் பூம்பூம்மாட்டுக்காரர்கள் என்ற சிறப்பு அங்கீகாரத்துடன்  சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்,’’ என்கின்றனர் பழங்குடியினர் நல ஆர்வலர்கள்.


Tags : Poor Boom Boomers , Curly Paralyzed , No Ration Card
× RELATED மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா வேன்...