×

திருவிக நகர் மண்டலத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலி

பெரம்பூர்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்து வருகிறது. இதுவரை சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பால் 39 பேருக்கு மேல் இறந்துள்ளனர். இந்நிலையில், திருவிக நகர் மண்டலத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். சென்னை திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு டிக்காஸ்டர் சாலையை சேர்ந்த 67 வயது பெண்ணுக்கு, கடந்த 9ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அங்கு, அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 11ம் தேதி இரவு 9 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில்  திருவிக நகர் பல்லவன் சாலையில் உள்ள தாங்கல் மைதானத்தில் நேற்று மதியம் 2 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மற்றொரு சம்பவம்: திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட ஓட்டேரி கொசப்பேட்டை வெங்கடேசன் தெருவை சேர்ந்த 75 வயது மூதாட்டிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 10ம் தேதி தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, அவருக்கு தொடர்ந்து உடல்நிலை மோசமாகவே கடந்த 11ம் தேதி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று மாலை ஓட்டேரி மயானத்தில் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. புழல்:  புழல் திருநீலகண்ட நகர் 3வது தெருவை சேர்ந்த 52 வயது நபர், புத்தகரம் வானவன் நகரை சேர்ந்த 62 வயது நபர், இவரது மருமகளான 36 வயது பெண், புழல் பாலவிநாயகர் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் காவலர், புழல் கங்காதரன் தெருவில் 38 வயது அரசு மருத்துவமனை செவிலியர், அலமாதி பகுதியில் 19 வயது கர்ப்பிணி, எடப்பாளையத்தை சேர்ந்த 53 வயது பெண்  ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பூர்: கொரோனா பாதிப்பில் சென்னை திருவிக நகர் மண்டலம் தொடர்ந்து 3வது இடத்தில் உள்ளது. இங்கு, நேற்று 31 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி, புளியந்தோப்பு பகுதிகளில் தலா 11 பேருக்கும், கே.பி.பார்க் பகுதியில் ஒருவருக்கும், ஓட்டேரி சச்சிதானந்தம் தெருவை சேர்ந்த ஒரே வீட்டில் 5 பேருக்கும், வெங்கடேசன் தெருவில் ஒரே வீட்டில் 3 பேருக்கும், செல்லப்பா தெரு கந்தசாமி கோயில் தெருவில் ஒருவருக்கும், சுப்புராயன் 4வது தெருவில் ஒருவருக்கும் என 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : women ,Travancore ,Tiruvika Nagar , Tiruvika city zone, Corona, 2 women killed
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது