×

வெளிநாடுகளில் இருந்து வெள்ளி கட்டிகள் வராததால் ஊரடங்கு தளர்த்திய பிறகும் வெள்ளி தொழில் பாதிப்பு: பாதிநாள் மட்டும் வேலையால் தொழிலாளர்கள் கவலை

சேலம்:  வெளிநாடுகளில் இருந்து வெள்ளிக்கட்டிகள் வராததால் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி குறைந்துள்ளதாகவும், பட்டறைகளில் பாதிநாள் மட்டுமே வேலை கிடைப்பதாகவும் தொழிலாளிகள் கவலை தெரிவித்தனர். சீனா, லண்டன், ஆஸ்திரேலியா, துபாய் போன்ற நாடுகளில் இருந்து இந்தியா வெள்ளிக்கட்டி இறக்குமதி செய்யப்படுகிறது. இப்படி இறக்குமதி செய்யப்படும் வெள்ளிக்கட்டிகள் மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகின்றன. அங்கிருந்து வியாபாரிகள், அவற்றை வாங்கி, பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புகின்றனர். இந்த வகையில் தமிழகத்திற்கு தேவையான வெள்ளி மும்பை, கொல்கத்தா மார்க்கெட்டில் இருந்து வாங்கி வரப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வெள்ளிப்பட்டறைகள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதன் காரணமாக வெள்ளி தொழிலை நம்பியிருந்த 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் தனிக்கடைகள், வெள்ளிப்பட்டறைகள் இயங்கலாம் என்று அரசு அறிவித்தது. இதையடுத்து 11ம் தேதி முதல் சேலம் செவ்வாய்பேட்டை, திருவாக்கவுண்டனூர், பள்ளப்பட்டி, பனங்காடு, சிவதாபுரம், மணியனூர் உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளிப்பட்டறைகள் திறக்கப்பட்டன. ஆனால் வெள்ளிப்பொருட்கள் உற்பத்திக்கு தேவையான வெள்ளிக்கட்டிகள் சரிவர வரவில்லை. இதனால் தினமும் பாதி நாள் மட்டுமே வேலை கிடைப்பதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.இது குறித்து சேலத்தை சேர்ந்த வெள்ளி வியாபாரிகள் கூறியதாவது:வெள்ளிப்பொருட்கள் உற்பத்திக்கு தேவையான வெள்ளிக்கட்டிகள் பல ஆண்டாக வௌிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளவில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக வெள்ளிக்கட்டிகள் உற்பத்தி இல்லாமல் போனது. இந்த நிலையில் தமிழக அரசு சில தளர்வுகள் செய்துள்ளது.இதில் 50 நாட்களுக்கு பிறகு கடந்த 11ம் தேதி சேலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வெள்ளிப்பட்டறைகள் திறக்கப்பட்டன.

ஆனால் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான வெள்ளிக்கட்டிகள், இருப்பு இல்லை. ஏற்கனவே இருப்பில் இருந்த வெள்ளிக்கட்டிகளை வைத்து,கடந்த இரு நாட்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இனிவரும் நாட்களில் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி செய்ய ேதவையான வெள்ளிக்கட்டிகள் இருக்காது. ஏற்கனவே கடந்த இரு மாதமாக பட்டறைகள் இயங்காததால் வெள்ளி தொழிலாளர்கள் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் வெள்ளிக்கட்டிகள் இல்லாததால் ஊரடங்கை தளர்த்திய பிறகும் மீண்டும் வெள்ளிப்பட்டறைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

தேங்கியவை விற்கணும்...
கடந்த 2 மாதமாக வெள்ளிப்பொருட்கள் விற்பனைகள் இயங்காததால் இந்தியா முழுவதும் பல கோடி மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. இந்த பொருட்கள் விற்பனையாக இன்னும் மூன்று மாத காலமாகும். அதுவரை புது வெள்ளிப்பொருட்களை வியாபாரிகள் வாங்கமாட்டார்கள். அதனால் தற்போது வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி செய்தாலும் உடனடியாக விற்பனை இருக்காது. இதன் காரணமாக வெள்ளிப்பொருட்களை உற்பத்தி செய்ய வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.



Tags : curfew ,overseas ,Half , Silver industry ,curfew , silver lining,overseas: Workers worried , day's work
× RELATED வாரிசு வரி விதிக்க திட்டமா?...