சென்னை: இந்திய அணி மட்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாவிட்டால், அந்த வகை கிரிக்கெட் வடிவமே இறந்து விடும்... என்று ஆஸ்திரேலிய அணி முன்னாள் நட்சத்திரம் கிரெக் சாப்பல் தெரிவித்தார். ஒருநாள், டி20 போட்டிகளின் வருகைக்குப் பிறகு ரசிகர்களிடம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வரவேற்பு குறைந்துகொண்டே வந்தது. இப்போது டி10, 100 பந்து போட்டி என கிரிக்கெட் டாப் கியரில் அடுத்த கட்டத்துக்கு மாறிக் கொண்டு இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றும் முயற்சியாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த ஆண்டு தொடங்கியது. இப்போது கொரோனா தொற்று பீதியால் அதுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திரமுமான கிரெக் சாப்பல் சமூக ஊடகமொன்றில் அறக்கட்டளை ஒன்றுக்காக கலந்துரையாடியபோது கூறியதாவது: கிரிக்கெட் விளையாட்டின் உன்னதமான வடிவம் டெஸ்ட் போட்டிகள் தான். அதனை இந்தியா கைவிட்டால் டெஸ்ட் போட்டி வடிவமே இறந்து போய்விடும். இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைத் தவிர டெஸ்ட் போட்டியில் ஆர்வம் காட்டும் நாடுகள் இப்போது இல்லை. டெஸ்ட் போட்டிக்காக இளம் வீரர்களை உருவாக்குவதுமில்லை. வருங்காலங்களில் ஒரே நேரத்தில் 3, 4 வடிவங்களில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு குறைவு. அதனால் டெஸ்ட் போட்டிதான் பாதிக்கும்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு டெஸ்ட் போட்டியின் மீது இருக்கும் ஆர்வம், அன்பு டெஸ்ட் போட்டிகள் உயிர்ப்புடன் தொடரும் என்ற நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது. நான் டி20 போட்டிக்கு எதிரானவன் இல்லை. பொதுமக்களுக்கு எதையும் விற்பது எளிது. ஆனால் சோதனை முயற்சிகளுக்கு பணப்பிரச்னை பெரிதாக இருக்கும். ஆனால் இந்தியாவால் டெஸ்ட் போட்டிகள் உயிர்ப்புடன் தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு கிரெக் சாப்பல் தெரிவித்தார்.