×

ஆன்லைனில் மட்டுமே மது விற்பனை செய்தால் பார், சரக்கில் கிடைக்கும் எக்ஸ்ட்ரா வருமானத்துக்கு வேட்டு: அரசு எதிர்ப்பின் பின்னணி அம்பலம்

சென்னை: ஆன்லைன் மது விற்பனையை தமிழக அரசு எதிர்ப்பதன் பின்னணி குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
 கொரோனாவால் நிறுவனங்கள் முடங்கிய நிலையில், மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தின. அதோடு, மதுபானங்கள் விலை மற்றும் வரியும் உயர்த்தப்பட்டது. மது விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததும், மதுபான நிறுவனங்கள் மட்டுமின்றி, மாநில அரசுகளும் மகிழ்ச்சி அடைந்தன. தமிழகத்தில், சென்னை தவிர தமிழகம் முழுவதும் மே 7ம்  தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு கடந்த 4ம் தேதி ஆணை பிறப்பித்தது.  இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ‘டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை  கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து டாஸ்மாக் கடைகளுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதற்கேற்ப டாஸ்மாக் கடைகளை திறந்த பிறகு குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். சமூக இடைவெளியே சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. மதுக்கடை திறந்ததை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே எந்த கடையிலும் சமூக இடைவெளி  கடைபிடிக்கவில்லை. கொரோனா வைரஸ் பரவல் அபாயம் ஏற்பட்டதால், கூட்டத்தை  கட்டுப்படுத்த ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யக் கோரி சென்னை உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இதை விசாரித்த  நீதிபதிகள், ‘உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை.  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளும் கடைபிடிக்கப்படவில்லை.  ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அரசு விரும்பினால்  ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யலாம்’ என்று உத்தரவிட்டனர்.

ஆன்லைனில்தான் மது விற்பனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்றது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதியை கேட்டுப்பெறாமல், மக்களுக்கு ஏற்படும் பலன்களை பற்றி கவலைப்படாமல் தமிழக அரசு மது விற்பனைக்காக மேல் முறையீடு செய்ததை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, சமூக ஆர்வலர்கள், பெண்கள் உட்பட பலர் கடும் விமர்சனம் செய்தனர். இத்தனையையும் மீறி, டாஸ்மாக் கடைகளில்தான் மது விற்பனையை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உறுதியாக இருப்பதன் பின்னணி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  அதாவது, டாஸ்மாக் வழக்கு விவகாரத்தில், ஹிப் பார் (எச்ஐபி) என்ற பிண்டெக் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. அதில், ஆன்லைனில் மதுபானங்களை சேவை கட்டணமின்றி வழங்க உத்தரவாதம் அளிப்பதாகவும், ஆன்லைன் விற்பனைக்கு ஏற்கெனவே டாஸ்மாக்குடன் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

உயர் ரக டாஸ்மாக் மதுபானங்கள் விற்க எலைட் டாஸ்மாக் கடைகள் நகரின் பல்வேறு இடங்களில் உள்ளன. இங்கு வெளிநாட்டு மதுபானங்கள் உட்பட பல உயர்ரக மது கிடைக்கும். ஹிப் பார் ஆப்ஸ் பதிவிறக்கம் செய்துள்ளவர்கள், அதிலேயே  ஆர்டர் செய்து விட்டு சென்று வாங்கிக் கொள்ளலாம். ஆனால், எலைட் தவிர பிற டாஸ்மாக் கடைகளில் இந்த ஆப்ஸ் மூலம் மது வாங்க அனுமதியில்லை.  இதற்கு முக்கிய காரணம், டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் அதிக லாபம் மற்றும் கமிஷன்தான் என கூறப்படுகிறது. அதாவது, டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு ₹10 முதல் 15 வரை கூடுதல் விலைக்கு வைத்து விற்கின்றனர். குடிமகன்கள் மது கிடைத்தால் போதும் என்று கூடுதலாக கொடுத்து மது வாங்குகின்றனர். அதிகபட்ச சில்லரை விலைக்கு மேல் விற்கக்கூடாது என்று உத்தரவு இருந்தும் யாரும் கடைப்பிடிப்பதில்லை.

ஆன்லைனில் விற்றால் இந்த கூடுதல் வருமானம் பார்க்க முடியாது. அதே நேரம் பார் நடத்தினால் வருமானம் கொட்டும். மதுக்கடையுடன் உள்ள பார்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. பார்களுக்கு தற்போது அனுமதி இல்லாவிட்டாலும், மது உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மூலமாக கணக்கில் வராமல் சரக்கு வரவழைத்து விற்று லாபம் சம்பாதிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
 அதாவது, மதுபான நிறுவனங்கள் ஆர்டரின் பேரில் சப்ளை செய்வது போக, கணக்கில் வராமல் சுமார் 30 சதவீத மது பானங்களை டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்புகின்றன எனவும், போலி கணக்கு காட்டி இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்யப்படுகிறது. போலி சரக்கு கூட விற்கலாம். இதனால் கமிஷன் மற்றும் கணக்கில் இல்லாத வருவாய் பல கோடி அள்ளலாம்.

அதாவது, உதாரணத்துக்கு ஒரு கடையில் 100 பிராந்தி பாட்டில்கள் கொண்ட கேஸ்  வழங்கப்பட்டால், 70 டாஸ்மாக் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. மீதமுள்ளவை  நேரடியாக உற்பத்தியாளர்கள் மூலம் சப்ளையாகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தமிழக  அரசு ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது என விஷயம் அறிந்த  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   இதனால்தான், ‘ஆன்லைனில் யாரும் மலிவான குவாட்டர் போன்ற மதுபானங்களை ஆர்டர் செய்யமாட்டார்கள். புல் பாட்டில்கள் மட்டுமே வாங்குவார்கள். ஹிப் பார் நிறுவனம் ேஹாம் டெலிவரி செய்ய முடியாது. இது மாநிலத்தில் அமல்படுத்தக் கூடிய திட்டமல்ல’ என்றெல்லாம் தமிழக அரசு ஆன்லைன் மது விற்பனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விசித்திரமான கருத்துக்களை தெரிவித்தது.

இதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள குடிமகன்கள் தங்களுக்கு தேவையான மதுபானத்தைத் தேர்வு செய்ய தெரியாதவர்கள். பிடித்த பிராண்டு வாங்குபவர்கள் கூட, டாஸ்மாக்கில் விற்கும் சரக்கை வாங்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாடிக்கையாளர் விருப்பத்தை விட கமிஷன்தான் முக்கியம் என்பதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது. கணக்கில் வராத சரக்கு விற்பனையால் உற்பத்தியாளர்கள் வரி செலுத்த தேவையில்லை. கூடுதல் விலைக்கு விற்பதால் வரி மிச்சம் மற்றும் கூடுதல் வருவாய் அமைச்சர் முதல் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் வரை பகிரப்படுகிறது. ஆன்லைன் விற்பனை அமலுக்கு வந்தால், இப்படி ‘வசூல்’ பார்க்க முடியாது என அவர்கள் கூறுகின்றனர்


Tags : Online Liquor Sales, Government of Tamil Nadu, Corona, Curfew
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...