×

சுற்றுலா வந்ததால் ஊரடங்கில் சிக்கி தவிப்பு: சரக்கு விமானத்தில் பறந்தது லெபனான் நாட்டு குடும்பம்: அதிகாரிகளுக்கு கண்ணீர்மல்க நன்றி

சென்னை: ஊரடங்கால் ஒன்றரை மாதத்திற்கு மேலாக சென்னையில் சிக்கி தவித்த லெபனான் நாட்டு குடும்பத்தினர், இரு நாட்டு அரசுகள் முயற்சியால் சென்னையிலிருந்து சரக்கு விமானத்தில் லெபனான் நாட்டிற்கு  திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். லெபனான் நாட்டை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு ஆண், 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 4 பேர் சுற்றுலா பயணிகளாக கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்தனர். இவர்கள், தமிழ் நாட்டிற்கு வந்தபோது கொரோனா வைரஸ் பீதியால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, இவர்கள் சொந்த நாடு திரும்ப முடியவில்லை. சுமார் ஒன்றரை மாதத்திற்கு மேலாக சென்னையில் தவித்து வந்தனர். அதோடு, தங்கள் நாட்டிற்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து டெல்லியில் உள்ள லெபனான் நாட்டு தூதரக அதிகாரிகள் இந்திய அரசுடன் பேசி சிறப்பு அனுமதி கோரினர். ஆனால், 4 பேருக்காக சிறப்பு தனி விமானம் இயக்க முடியாது என்பதால் லெபனான் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து இந்த குடும்பத்தினர் சென்னையிலேயே முடங்கிக் கிடந்தனர். இந்நிலையில் லெபனான் நாட்டு தூதரக அதிகாரிகள் தொடர்ந்து இந்திய அரசை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம், லெபனானுக்கு சென்னையிலிருந்து விமான சேவை இல்லை, சென்னையிலிருந்து கத்தார் நாட்டிற்கு சரக்கு விமானம் உள்ளது. அதில் அனுப்பி வைக்கிறோம். அங்கிருந்து லெபனான் சென்று விடலாம் என்று தெரிவித்தது.

இதை தூதரக அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு, லெபனான் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொண்டனர்.
இதை தொடர்ந்து, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் சென்னை விமானநிலைய அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் கொடுத்தது. அதன்படி லெபனான் குடும்பத்தினர் நேற்று காலை சென்னை விமான நிலைய சர்வதேச சரக்கக பகுதிக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவம், குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டன. பின்பு நேற்று மாலை 3.15 மணிக்கு சென்னையிலிருந்து தோகா சென்ற கத்தார் ஏர்லைன்ஸ் சரக்கு விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டனர். அவர்களும் கண்ணீர் ததும்ப சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு சரக்கு விமானத்தில் லெபனான் நோக்கி பறந்தனர்.

Tags : Lebanese ,Kannirmalka ,Tourism , Curfew, cargo plane, Lebanese family, Corona
× RELATED மண்டபத்தில் நிர்வாகச் சிக்கல்களால்...