×

உயரழுத்த மின் இணைப்பு கட்டணம் வசூலிக்க தடை கோரி வழக்கு: மே 26 வரை நிர்பந்திக்க கூடாது என உத்தரவு

மதுரை: உயரழுத்த மின் இணைப்பு கட்டணத்தை வசூலிக்கத் தடை கோரிய வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட் கிளை, ஏப்ரல் மாத கட்டணத்தை செலுத்தும்படி மே 26 வரை நிர்பந்திக்க கூடாது என தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாசலம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: உயரழுத்த மின் இணைப்புள்ள தொழிற்சாலைகளுக்கு மின் பளு அளவுக்கு தனி கட்டணமும், பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு தனி கட்டணமும் வசூலிக்கப்படும். தற்போதைய ஊரடங்கால், கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நூற்பாலைகள் இயங்கவில்லை. சிறிய பராமரிப்பு பணி, மின் விளக்குகள் மற்றும் பாதுகாப்பு பணிக்கான மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ஊரடங்கு காலத்தில் மின்பளு அளவுக்கான கட்டணத்தில் 20 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என மின்வாரிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதை மின் ஒழுங்குமுறை ஆணையமும் வலியுறுத்தியுள்ளது. ஆனால், இந்த விதிமுறையை மீறி மின்பளு அளவுக்கான கட்டணத்தில் 90 சதவீதம் செலுத்துமாறு மின்சார வாரியத்திலிருந்து ரசீது அனுப்பப்பட்டுள்ளது. இந்த ரசீதுகளை திரும்ப பெற்று 20 சதவீத கட்டணத்துடன் புதிய ரசீது அனுப்ப உத்தரவிட வேண்டும். ஊரடங்கு அமலில் இருக்கும் வரை உயரழுத்த மின் இணைப்புக்கு 90 சதவீத கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

 இந்த மனுவை நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் நேற்று வீடியோ கான்பரன்சிங்கில் விசாரித்தார். அரசு தரப்பில், 20 சதவீத கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற மின் ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மின்சார வாரியத்தின் சார்பில் அப்பீல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
 இதையடுத்து, மின்சார வாரியத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மே 26க்கு ஒத்திவைத்தார். அதுவரை உயரழுத்த மின் இணைப்புக்கான ஏப்ரல் மாத மின் கட்டணத்தை செலுத்த நிர்பந்திக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.


Tags : Highlights, Charge, Icort Branch, Corona, Curfew
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி...