×

கமிஷனர் அலுவலகத்தில் தொற்று அதிகரிப்பால் அச்சம்: மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த 2 எஸ்ஐ உட்பட 9 பேருக்கு கொரோனா

சென்னை:  சென்னையில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாநகர காவல் துறையில் நேற்று முன்தினம் வரை கூடுதல் கமிஷனர் உட்பட 160 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், அடையார் கிரின்வேஸ் சாலையில் உள்ள மருதம் மையத்தில் பணியாற்றி வரும் 2 கமாண்டோ படை வீரர்கள்,  கோயம்பேடு போக்குவரத்து தலைமை காவலர் உட்பட 2 காவலர்கள், வேப்பேரி காவல் நிலையம் சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கார் டிரைவர், பரங்கிமலை ஆயுதப்படை காவலர் ஒருவர், ஓட்டேரியில் காவலர் ஒருவர் என நேற்று 9 பேருக்கு நோய் தொற்று உறுதியானது.

இதையடுத்து 9 பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேபோல் தி.நகர் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்த தீயணைப்பு வீரர் ஒருவருக்கும் நோய் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் சென்னையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட தீயணைப்பு  வீரர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், சென்னையில் போலீசாரின் பாதிப்பு 169ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்புக்கு ஆளான தி.நகர் துணை கமிஷனருக்கு நேற்று தனியார் மருத்துவமனையில் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வெளியாகி உள்ளது.

இது பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டு வரும் போலீசாரின் குடும்பத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் அங்கு பணியாற்றி வரும் போலீசார் அச்சமடைந்துள்ளனர்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாறிய காவல்நிலையம்
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பணிபுரியும் ரயில்வே இன்ஸ்பெக்டர் உட்பட 3 ஆண் காவலர்கள், 3 ெபண் காவலர்கள் என 7 பேருக்கு கடந்த 2 நாளாக கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்த நிலையில் அவர்கள் சோதனை செய்யப்பட்டனர். இதையடுத்து சோதனையின் முடிவுகள் நேற்று வந்த நிலையில் இன்ஸ்பெக்டர் உட்பட 6 ரயில்வே போலீசாருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், சென்ட்ரல் ரயில்நிலையத்தில் உள்ள காவல்நிலையம் முழுவதும் சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டு காவல் நிலையத்தை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 53 நாட்களாக ரயில்நிலையம் மூடப்பட்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பயணிகள் யாரும் வராத நிலையில் இவர்களுக்கு கொரோனா தொற்று எப்படி பரவியது என்று விசாரித்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கடந்த 4 நாட்களாக சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் அவர்களில் யாருக்காவது கொரோனா தொற்று பாதிப்பு இருந்து அதன்மூலம் பரவியதா என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags : commissioner ,Corona ,Central Crime Division , Office of the Commissioner, 2SI, Corona, Curfew
× RELATED வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து...