×

குமரி மாவட்டத்தில் ஓகி முதல்கொரோனா வரை அடிமேல் அடிவாங்கிய வாழை விவசாயிகள்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நெல், வாழை, ரப்பர், தென்னை போன்றவை பிரதான விவசாய பயிராக விளங்கி வருகின்றன. அதனை தவிர பணப்பயிரான கிராம்பு, மிளகு, ஏலக்காய் உள்ளிட்டவைகளும் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் வாழை குலைகளுக்கு கேரளா மற்றும் உலக நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. மாவட்டத்தில் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட், தக்கலை, திங்கள்சந்தை மற்றும் மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு விவசாயிகள் வாழை குலைகளை கொண்டு சென்று தரத்திற்கு ஏற்றார் போல் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.   ஆனால் கேரள மாநிலத்தை சேர்ந்த வாழைகுலை வியாபாரிகள், வாழைகள் பயிரிடப்பட்டு இருக்கும் தோட்டத்திற்கு நேரடியாக வந்து வாழை குலைகளை எடைபோட்டு வாங்கிச்செல்கின்றனர். வியாபாரிகள் வந்து மொத்தமாக எடைபோட்டு வாழைகுலைகள் வாங்கிச்செல்வதால் விவசாயிகளுக்கு போதிய அளவு வருமானம் கிடைத்து வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் நெல் விவசாயம் மறைந்து வாழை விவசாயம் அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தில் 6500 ஹெக்டேர் பரப்பளவில் வாழை விவசாயம் நடந்து வருகிறது.   குறிப்பாக ஏத்தன், ரசகதலி வாழைகள் அதிகம் பயிரிடப்படுகிறது. ஏத்தன்வாழை குலைகள் சிப்ஸ் தயாரிக்க வியாபாரிகளால் வாங்கப்படுகிறது.

இதனை தவிர வாழை பழங்களால் பல மதிப்புகூட்டு பொருட்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.  முன்பு வாழை குலைகளை போட்டிப்போட்டு வாங்கி சென்ற வியாபாரிகள், கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு வாழைகுலைகளை வாங்க வருவது இல்லை. இதனால் வாழை குலைகள் வெட்டாமல், வாழையிலேயே பழுத்து அழுகின. மாவட்டத்தில் உள்ள வாழை குலை வியாபாரிகள் ஒருசிலர் வந்து, வாழை குலைகளை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவிற்கு கொண்டு செல்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காமல் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர். குமரி மாவட்டத்தை ஓகி புயல் தாக்கிய போது, இங்கு பயிரிடப்பட்ட வாழைகள் அனைத்தும் சேதமானது. இதில் விவசாயிகள் பல கோடி அளவிற்கு நஷ்டத்தை சந்தித்தனர். அந்த நஷ்டத்தை பொருட்படுத்தாமல், அடுத்தும், அவர்கள் வாழை சாகுபடியை மேற்கொண்டனர். ஓகி புயலின்போது ஏற்பட்ட நஷ்டத்தில் ஏற்பட்ட வடு மாறுவதற்கு உள்ளே அடுத்த அடியாக கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கால் வாழை விவசாயிகள் நிலை குலைந்துள்ளனர். கொரோனா பரவல் ஊரடங்கால் ஏத்தன் குலை கிலோ ₹ 18க்கு கொள்முதல் செய்யப்பட்டது. ரசகதலி ஒரு கிலோ ₹ 15க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது வர்த்தக நிறுவனங்கள் திறக்க சில தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வாலைகுலைகள் சற்று விலை உயர்ந்துள்ளது. ₹ 18க்கு கொள்முதல் செய்யப்பட்ட ஏத்தன் தற்போது ₹ 28க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற குலைகள் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது
 

ரூ.100கோடி இழப்பு
இது குறித்து வாழை விவசாயிகள் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு நிகராக வாழை விவசாயமும் நடந்து வருகிறது. நெல்லிற்கு போதிய விலை கிடைக்காத பட்சத்தில் நெல்விவசாயம் செய்யும் விவசாயிகள் வாழை சாகுபடி செய்வது வழக்கம். குமரி மாவட்டத்தில் ஏத்தன், ரசகதலி வாழை அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. அதனை தவிர செவ்வாழை, சிங்கன், மட்டி உள்ளிட்ட வாழைகளும் பயிரிடப்படுகிறது. ₹ 1800க்கு விற்ற செவ்வாழை குலைகள் தற்போது ₹ 500க்கு விலைபோகவில்லை. இதுபோல் ₹ 450க்கு விற்பனை செய்த ஏத்தன்குலை ₹ 100 முதல் ₹ 150க்கு விலை போகிறது. ₹ 450க்கு விலைபோன ரசகதலி குலை ₹ 100க்கு விலைபோகிறது. இதனால் வாழைக்கு செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை. இந்த குறைந்த விலைக்குகூட வாழைகுலைகளை வாங்க வியாபாரிகள் இல்லை.  இதனால் வாழையிலேயே குலைகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

 தற்போது ஊரடங்கு தளர்வுகளால் வாழைகுலைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளனர். ஏத்தன்குலை விலை சற்று உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், பல ஏக்கர் பரப்பளவிலான வாழைகள் முறிந்துவிழுந்துள்ளன. இதனால் விவசாயிகள் பலர் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். மொத்தத்தில் கொரோனா ஊரடங்கால் மாவட்டம் முழுவதும் சுமார் ₹ 100 கோடிக்கு மேல் வாழை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாழை விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். வாழை விவசாயிகளுக்கு போதிய இழப்பீடு அரசு வழங்கவேண்டும். மேலும் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கி இருந்த விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்றனர்.

Tags : Banana farmers ,district ,Kumari ,Ogie Mudgalorana ,Banana peasants ,Ogi ,Gorona , Banana peasants in the Kumari district from Ogi to Gorona
× RELATED குமரி மாவட்டத்தில் மேலும் 140 பேருக்கு கொரோனா: பாதிப்பு 6,552 ஆக உயர்வு