×

புதிய பஸ் நிலையம் மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் வரத்து அதிகரிப்பு

நெல்லை: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இயங்கிவரும் மார்க்கெட்டிற்கு மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் வரத்து அதிகரித்து உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு, வருகிற 17ம் தேதி வரை அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் தினசரி சந்தைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க காய்கறி கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளன. நெல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மார்ககெட்டில் 30 கடைகள் உள்ளன. இங்கு உள்ளூர் காய்கறிகள் மட்டுமின்றி வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த மார்க்கெட் மாலையில் துவங்கி அதிகாலை வரை நடைபெறும். இங்கு கொண்டு வரப்படும் காய்கறிகள் ஏலம் விடப்பட்டு கேரளா மாநிலத்துக்கும் நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் லாரிகளில் கொண்டு செல்லப்படும். மாவட்டத்தின் உள்ள பல்வேறு மார்க்கெட்களுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு இங்கிருந்து வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம்.

ஊரடங்கால் வாகனங்கள் ஓடாத காரணத்தாலும், மாவட்டம் விட்டு மாவட்டம் வாகனங்களை இயக்க முடியாததாலும் காய்கறிகள் வரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக புதிய பஸ் நிலையத்தில் செயல்படும் நயினார்குளம் மார்க்கெட்டிற்கு தற்போது கத்தரிகாய், வெண்டைக்காய், தக்காளி, உருளை, கேரட், பல்லாரி, சிறிய வெங்காயம் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் இருந்து பல்லாரி, சிறிய வெங்காயம் டன் கணக்கில் லாரிகளில் கொண்டு வரப்பட்டு கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. வரத்து அதிகரித்து இருப்பதால் வெங்காயத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Tags : Maharashtra , Increase ,onion delivery,Maharashtra ,new bus station market
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...